அடுத்த வருடம் அவுஸ்திரேலியா பயணிக்கிறது இலங்கை

829
Sri Lanka Cricket Team

கிரிக்கட் அவுஸ்திரேலிய வெளியிட்ட சமீபத்திய அட்டவணைப்படி அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலியா பயணம் செய்து  3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

2014ஆம் ஆண்டின் ஐசிசி உலக டி20 சம்பியன்ஸ் அணியான இலங்கை அணி வலிமைமிக்க அவுஸ்திரேலிய அணியை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 17,19 மற்றும் 22ஆம் திகதிகளில் சந்திக்கவுள்ளது. போட்டி நடைபெறும் திகதிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் போட்டி நடைபெறும் மைதானங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட ஜூலை மாதம் இலங்கை வருகிறது. இப்போட்டித் தொடர் ஜூலை மாதம் 26ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 9ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை அணி இறுதியாக 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்தது. அத்தொடரில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்று இழந்தது ஆனால் ஐந்து போட்டிகள் ஒருநாள் போட்டித்  தொடரை  2-2 என்று சமப்படுத்தியது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் வென்றது.

அடுத்த வருடம் இலங்கை அணி அவுஸ்திரேலியா செல்ல முன் மூன்று டெஸ்ட், மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாட தென்ஆபிரிக்கா பயணிக்கிறது. இப்போட்டித் தொடர் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் இலங்கை அவுஸ்திரேலியா பயணிக்க முன் , அவுஸ்திரேலியா அணி தென்ஆபிரிக்கா அணியோடு மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், நியுசிலாந்து அணியோடு மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை கொண்ட ஒரு தொடரில் விளையாடவுள்ளது.

கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் இன்னுமொரு அறிக்கையின் படி 2018-19 பருவத்தில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அவுஸ்திரேலியாவின் தலைநகரான கென்பராவில் நடைபெறவுள்ள நிலையில் 2ஆவது போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் போட்டி நடைபெறும் திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.