இந்த வருட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 13ஆவது போட்டி நேற்று மொஹாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கட் சங்க பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் மிலர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவ்தம் கம்பீர் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக ஷோன் மார்ஷ் ஆட்டம் இழக்காமல் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்களையும், முரளி விஜே 22 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் மோர்ன் மோர்கல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்ற உமேஷ் யதவ், பியுஷ் சவ்லா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.
பதிலுக்கு 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் நயிட் ரைடர்ஸ் அணி 17 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சார்பில் ரொபின் உத்தப்பா 28 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களையும், கவ்தம் கம்பீர் 34 பந்துகளில் 34 ஓட்டங்களையும், யூசுப் பதான் ஆட்டம் இழக்காமல் 6 பந்துகளில் 12 ஓட்டங்களையும் பெற்று இருந்தார்கள். பஞ்சாப் அணியின் சார்பில் பந்து வீச்சில் அக்ஸார் பட்டேல் மற்றும் பர்திப் சஹு ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் ரொபின் உத்தப்பா தெரிவு செய்யப்பட்டார்.