9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 12ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ரஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்றது. இந்த போட்டி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி மற்றும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை துடுப்பாட அழைப்பு விடுத்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்தது 142 ஓட்டங்களைப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அம்பாதி ராயுடு 49 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 28 பந்துகளில் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.ஹைதராபாத் அணியின் சார்பில் பந்து வீச்சில் பரின்டர் ஸ்ரன் 3 விக்கட்டுகளைக் கைப்பற்ற புவனேஷ்வர் குமார் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் வீழ்த்தினர்.
இதனை அடுத்து 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்று 15 பந்துகள் மீதமிருக்க 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோல்வி அடையச் செய்தது.
சன் ரயிசஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தலைவர் என்ற வகையில் பொறுப்பாக விளையாடிய டேவிட் வோர்னர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 59 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 90 ஓட்டங்களையும், மொயிசஸ் ஹென்ரிக்ஸ் 22 பந்துகளில் 20 ஓட்டங்களையும், தீபாக் ஹூதா ஆட்டம் இழக்காமல் 9 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் பந்து வீச்சில் டிம் சவ்தி 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் தெரிவு செய்யப்பட்டார்.