20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டித்தொடரின் மற்றுமொரு போட்டி நேற்று பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கை அணி 2012ஆம் ஆண்டு சம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணியோடு மோதியது. கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் மேற்கிந்திய தீவுகள் அணி இப்போட்டியில் விளையாடியது . இலங்கை அணியும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தாலும் பலமிக்க அணிகளுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் இலங்கை அணி பெரும் சவாலோடு களம் இறங்கியது. நேற்றைய போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலவைர் டெரன் சமி முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.
நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகளின் விபரம்,
இலங்கை அணி :
எஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர்), திலகரத்ன தில்ஷன், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன, சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா, நுவன் குலசேகர, துஷ்மன்த சமீர, ரங்கன ஹேரத், ஜெப்ரி வண்டர்செ
மேற்கிந்திய தீவுகள் அணி :
டெரன் சமி (தலைவர்) , என்டர் ப்லெச்சர், க்றிஸ் கெயில், ஜொன்சன் சார்ல்ஸ், மார்லன் செமுவல்ஸ், டினேஷ் ராம்டின், டுவேயின் ப்ராவோ, என்டர் ரசல், கார்லஸ் பரத்வைட், சாமுவேல் பத்ரி, சுலிமன் பென்
நடுவர்கள் :
அலீம் டார் மற்றும் ஜோன் க்லொயிட்
டெரன் சமியின் தீர்மானத்திற்கு அமைய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக திலகரத்ன தில்ஷான் மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி களம் புகுந்தது. முதலாவது ஓவரை என்டர் ரசல் வீசினார். முதல் ஓவரிலேயே திலகரத்ன தில்ஷான் ஒரு பவுண்டரி மற்றும்ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் கடந்த போட்டியைப் போல் இப்போட்டியிலும் திலகரத்ன தில்ஷான் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவரின் தவறான தீர்ப்பினால் தில்ஷன் 16 ஓட்டங்களோடு துரதிருஷ்டவசமாக எல்.பி. டம்ளியு முறையில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து இலங்கை அணியின் உப தலைவர் தினேஷ் சந்திமால் 12 ஓட்டங்களோடு ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை எடுத்தது. தனி மரமாக போராடிய “இரும்பு மனிதன்” என்று அழைக்கப்படும் திசர பெரேரா 29 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடி இறுதியில் ஓட்டங்களைக் குவிக்கலாம் என்று விளையாடினாலும் அவரால் 32 பந்துகளில் 20 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் சாமுவேல் பத்ரி 4 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கட்டுகளை தகர்த்தார். அவரைத் தவிர டுவேயின் ப்ராவோ 2 விக்கட்டுகளையும் என்டர் ரசல் மற்றும் கார்லஸ் பரத்வைட் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதமும் கைப்பற்றினர்.
123 என்ற வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் களம் இறங்கினார்கள். க்றிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணாக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தனர். ஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக க்றிஸ் கெயில் களமிறங்கவில்லை.முன்னதாக இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது கடைசி நேரத்தில் க்றிஸ் கெயில் களத்தடுப்பில் ஈடுபடாமல் வெறியேறிவிட்டார். ஐ.சி.சி. விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒரு வீரர் களத்தடுப்பில் ஈடுபடாவிட்டால் அவர் களமிறங்குவதில் தாமதம் செய்யப்படும். இந்த விதிப்படி 4 விக்கட்டுகளை இழந்த பிறகு தான் க்றிஸ் கெயில் களமிறங்க முடியும் என்று நடுவர்கள் தெரிவித்து விட்டார்கள். இதனால் மேற்கிந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக, என்டர் ப்லெச்சர் மற்றும் ஜொன்சன் சார்ல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதல் என்டர் ப்லெச்சர் பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையை பொழிந்தார். முதல் விக்கட் 39 ஓட்டங்களாக இருந்த போதுவீழ்த்தப்பட்டது. பொறுமையாக விளையாடிய ஜொன்சன் சார்ல்ஸ் 10 ஓட்டங்களோடு மலிங்கவிற்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட சுழல் பந்து வீச்சாளர் ஜெப்ரி வண்டர்செயின் பந்து வீச்சில் பொவ்ல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 54 ஓட்டங்களாக இருக்கும் போது அதிரடி ஆட்டக்காரர் மார்லன் செமுவல்ஸ் 3 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். பின் ஓட்டங்களைப் பெற சிரமப்பட்ட தினேஷ் ராம்டின் 13 பந்துகளை சந்தித்து 5 ஓட்டங்களோடு மிலிந்த சிறிவர்த்தன வீசிய பந்து வீச்சில் பொவ்ல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 12.5 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.
அதன் பின் களம் இறங்கிய என்டர் ரசல் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்டர் ப்லெச்சரோடு சேர்ந்து சிறப்பாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு துணைப் புரிந்தார். தூண் போல் நின்று சிக்ஸரும், பவுண்டரியும் விளாசிய என்டர் ப்லெச்சர் ஆட்டம் இழக்காமல் 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றார். என்டர் ரசலும் ஆட்டம் இழக்காமல் வேகமாக 8 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 20 ஓட்டங்களைக் குவித்தார்.
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 84 ஓட்டங்களைப் பெற்ற என்டர் ப்லெச்சர் தெரிவானார். ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் இலங்கை அணிக்கான அடுத்த போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி இங்கிலாந்து அணியோடு இடம் பெறவுள்ளது.