மூத்த வீரர்கள் சிறப்பாக செயற்படவில்லை – மெதிவ்ஸ்

2411
Mathews

டி20 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கையின் மூத்த வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லை. 

இதை போன்றே  எதிர்வரும் போட்டிகளிலும் மூத்த  வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லையெனில், இலங்கை அணியின் இந்த தடுமாற்றம் மேலும் தொடரும் என இலங்கை இருபதுக்கு20 அணியின் தற்காலிகத் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இப்போட்டியில், ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இலங்கை இறுதி நேரத்தில் பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால் இந்திய அணி, 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மெதிவ்ஸ், “ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இங்கேயிருப்பது தான் எங்களது அணி. அனேகமான நேரங்களில், சில சிரேஷ்ட வீரர்களிலேயே தங்கியிருக்கிறோம். சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்படவில்லையெனில், அனேகமான நேரங்களில் நாங்கள் தடுமாறுவோம். டி20 ஆசியக் கிண்ணம், டி20 உலகக் கிண்ணம் போன்ற தொடர்களில், உங்களது அணியில் அதிக சிரேஷ்ட வீரர்கள் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை. அணியிலுள்ள இளைய வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பிக்க, சிறிது காலம் எடுக்கும். நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஆனால் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இதுவல்லஎனத் தெரிவித்தார்.

திலகரத்ன  டில்ஷான், எஞ்சலோ மெதிவ்ஸ் இருவரும் இத்தொடரில் பிரகாசிக்கத் தவறியதோடு, முதலிரு போட்டிகளிலும் ஓரளவு ஓட்டங்களைப் பெற்ற டினேஷ் சந்திமால் தடுமாறி வருகிறார். நேற்று இடம்பெற்ற போட்டியில் சாமர கபுகெதர, ஓட்டங்களைப் பெற்றாலும், முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்திருந்தார். திசர பெரேரா, இன்னமும் சிறப்பாகப் பிரகாசித்திருக்கவில்லை. இந்தியாவுடனான போட்டியில் அதிரடியாக ஆடியிருந்தாலும், நடுவரின் மோசமான தீர்ப்பொன்றினால் அவர் ஆட்டமிழந்திருந்தார். குறிப்பாக டில்ஷான், அதிகமாகத் தடுமாறி வருகிறார்.

மெதிவ்ஸ் மேலும் கூறுகையில்  “இலங்கை கிரிக்கெட்டுக்கு, மிகச்சிறந்த சேவகனாக  திலகரத்ன டில்ஷான் இருந்துள்ளார். அனைவருமே, இவ்வாறான நாட்களில் சிக்குவதுண்டு. சிரேஷ்ட வீரர்கள் மாத்திரமன்றி, நாமனைவரும் பொறுப்பை ஏற்க வேண்டும், இந்திய அணி வீரர்கள் கடந்த 2 வருடங்களாக சிறப்பாக  பொறுமையாக விளையாடி வருகிறார்கள், இதனால் அந்த அணி வீரர்கள் அணியில் நீண்ட காலம் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள், நாமும் இதை தான் செய்ய வேண்டும்”  என்று தெரிவித்தார்.