இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இன்று (30) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இதனிடையே, போட்டிகளின் முதல் நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் மற்றும் ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக் ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
அத்துடன், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மொஹமட் சபான் மற்றும் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த வேலு கிரிஷாந்தனி ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஒட்டப் போட்டியில் பங்குகொண்ட ரொஷான் தம்மிக, 24 வருடங்கள் பழமையான இலங்கை சாதனையை இரண்டு தடவைகள் முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இன்று காலை நடைபெற்ற 110 மீட்டர் சட்டவேலி ஒட்டப் போட்டி தகுதிச்சுற்றுப் போட்டியை 13.97 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய இலங்கை சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியை 13.89 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக 1997இல் மலேஷிய திறந்த மெய்வல்லுனர் தொடரில் மகேஷ் பெரேரா நிலைநாட்டிய 14.00 செக்கன்கள் சாதனையை ரொஷான் தம்மிக்க முறியடித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், வடக்கின் நட்சத்திர வீரரான அருந்தவராசா புவிதரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்கரராகிய இஷார சந்தருவனை அவர் முதல் முறையாக வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 4.70 மீட்டரை தவறவிட்ட புவிதரன், அதன்பிறகு 4.80, 4.90, 5.00 மீட்டர் உயரங்களை முதல் முயற்சியிலேயே தாவி அசத்தினார்.
மறுபுறத்தில் இஷார சந்தருவன் 5.00 மீட்டர் உயரத்தை இரண்டாவது முயற்சியில் தாவி புவிதரனுக்கு சவால் அளித்தார்.
>> தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நாளை ஆரம்பம்
இதனையடுத்து, 5.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு இருவரும் மேற்கொண்ட மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.
எனவே, 5.00 மீட்டர் உயரத்தைத் தாவுவதற்கு இருவரும் மேற்கொண்ட உயரத்தை ஒப்பிடுகையில், புவிதரன் முதலாவது முயற்சியிலும், இஷார சந்தருவன் இரண்டாவது முயற்சியிலும் குறித்த உயரங்களை தாவியிருந்ததால், தங்கப் பதக்கம் புவிதரனுக்கும், வெள்ளிப் பதக்கம் இஷார சந்தருவனுக்கும் வழங்கப்பட்டன.
இதேநேரம், 4.80 மீட்டர் உயரத்தைத் தாவிய மற்றுமொரு தேசிய சம்பியான எரங்க ஜனித் வெண்கலப் பதக்கத்தினை வெற்றிகொண்டார்.
ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரான இஸட்.ரி.எம். ஆஷிக் தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டியில் அவர் 46.85 மீட்டர் தூரத்திற்கு தமது திறமையை வெளிப்படுத்தினார்.
தட்டெறிதல் போட்டியில் அவரது அதிசிறந்த தூரமாகவும் இது பதிவாகியது.
இதில் இலங்கை இராணுவ வீரர்களான கே. சில்வா (45.01 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், பி. சபரமாது (44.25 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.
நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் ஜொலித்து வருகின்ற நுவரெலியாவைச் சேர்ந்த வேலு க்ரிஷாந்தனி, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் போட்டித் தூரத்தை நிறைவுசெய்ய 37 நிமிடங்களும் 07.88 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.
குறித்த போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான சி.எஸ் ஹேரத் (36 நிமி. 23.95செக்.) தங்கப் பதக்கத்தையும், எல். ஆரியதாஸ (36 நிமி. 36.62செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.
சபானுக்கு வெண்கலம்
இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.12 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான 100 மீட்டரில் பங்குகொண்ட சபானுக்கு 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இன்றைய போட்டியில் சபானுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த அருண தர்ஷன தங்கப் பதக்கத்தினை வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 24.08 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
இதேநேரம், 24.24 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த காலிங்க குமாரகே வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாஸில் உடையார் (5ஆவது இடம்), மொஹமட் நௌஷாத் (4ஆவது இடம்), அஹமட் இஜாஸ் (6ஆவது இடம்) ஆகிய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட், இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 15.42 மீட்டர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியில் ஸ்ரேஷான் தனன்ஜய (15.95 மீட்டர்) தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, சமல் குமாரசிறி (15.59 மீட்டர்) மற்றும் சன்ஜய ஜயசிங்க (15.55 மீட்டர்) முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
நாளை போட்டியின் கடைசி நாளாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<