ஒரு வருடத்தின் பின் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் போட்டிகள்

202

இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களுக்காக இவ்வருடத்தில் நடைபெறுகின்ற முதலாவது போட்டித் தொடரான 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நாளை (26) முதல் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் சுகாதார வழிகாட்டல்களைக் கடுமையாகப் பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதியின்றி நடத்தப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது

தேசிய மெய்வல்லுனர் குறும்பட்டியலில் 23 தமிழ் பேசும் வீரர்கள்

இதன்படி, 38 போட்டி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக தொடர்ந்து நான்கு தினங்கள் சுமார் 150 மெய்வல்லுனர்கள் பங்குபற்றும் வகையில் காலை 6.30 மணி முதல் நண்பகல் வரை போட்டிகள் அனைத்தும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

அத்துடன், கடந்த காலங்களில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 23 தமிழ் பேசுகின்ற வீரர்கள் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 16 வீரர்களும் 7 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.   

மேலும் டொரிங்டனில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் விடுதி மற்றும் சுகததாஸ ஹோட்டல் ஆகியவற்றில் மாத்திரமே பங்குபற்றும் வீர வீராங்கனைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் அனைவரும் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அந்தந்த தினங்களில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபற்றும் வீர வீரரங்கனைகளை பிரத்தியேக பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பெண்களுக்கான மரதனில் ஹிருனியின் 2ஆவது அதிசிறந்த காலம்

வீர வீராங்கனைகள், பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், உதவியாளர்கள் ஆகியோரை விளையாட்டரங்குக்கு அழைத்துச் செல்வதற்கென பிரத்தியேக போக்குவரத்து நடைமுறைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

இதனிடையே, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது அடுத்த வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான திறன்காண் போட்டியாகவும் அமையவுள்ளது

இதன்படி, தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய பல முன்னணி வீரர்கள் இம்முறை போட்டிகளில் களமிறங்கவுள்ளார்கள்

இதில், 2017இல் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், 2018இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டவருமான காலிங்க குமாரகே, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தடைக்குள்ளாகிய பிறகு முதல்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் களமிறங்கவுள்ளார்.

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் இரத்து

இதனிடையே, கடந்த வருடம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு முன் விபத்துக்குள்ளாகிய நிமாலி லியனாரச்சி மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்ட நதீஷா ராமநாயக்க ஆகிய இருவரும் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கவுள்ளனர்.

இதேநேரம், உபாதை காரணமாக கடந்த வருடம் முழுவதும் மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகிய குறுந்தூர ஓட்ட வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்கவும் தேசிய மட்ட போட்டியொன்றில் முதல்தடவையாக களமிறங்கவுள்ளார்

எதுஎவ்வாறாயினும், கொவிட் – 19 வைரஸ் காரணமாக இவ்வருடத்தில் நடைபெறவிருந்த தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகள், இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா என்பன ரத்து செய்யப்பட்டன.  

இதன் காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவின் பிறகு இலங்கை மெய்வல்லுனர்கள் பங்குபற்றும் முதலாவது மெய்வல்லுனர் போட்டிகள் இதுவென்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<