தேசிய மெய்வல்லுனரில் காலிங்க, நதீஷாவுக்கு இரட்டை தங்கம்: சப்ரினுக்கு பின்னடைவு

The 98th National Athletics Championship 2020

200

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று (29) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. 

இப்போட்டித்தொடர் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், 150 வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

சண்முகேஸ்வரனின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தரங்க

இம்முறை போட்டிகளில் ஒரு தேசிய சாதனையும், ஒரு போட்டிச் சாதனையும் நிகழ்த்தப்பட்டது. இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சச்சினி பெரேரா 3.56 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனை படைத்தார்.

அதேபோல, பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா 6.33 மீற்றர் தூரம் பாய்ந்து போட்டி சாதனை நிலைநாட்டினார். ஆனால், தேசிய சாதனையை விட 10 சென்றி மீற்றர் குறைவான தூரத்தையே அவர் பதிவுசெய்தார்.

எனவே, சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு நடைபெற்ற முதலாவது தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் என்பதால் கடந்த காலங்களைக் காட்டிலும் இம்முறை போட்டிகளில் வீரர்கள் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்தவில்லை.

அதுமாத்திரமின்றி, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற வருடத்தின் அதிசிறந்த ஆண், பெண் மெய்வல்லுனர்களுக்கான விருதுகளும் இம்முறை வழங்கப்படவில்லை

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஏன் வட, கிழக்கு வீரர்கள் இல்லை?

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் கடைசி நாளான இன்று (29) 8 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு பின்னடைவு

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற சப்ரின் அஹமட், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அடைந்தார். போட்டியில் அவர் 15.40 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார். 

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று, இறுதியாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தை சப்ரின் அஹமட் வென்றார்.

எனினும், இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் அவரால் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது

எதுஎவ்வாறாயினும், இம்முறை தேசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தை முன்னாள் தேசிய சம்பியனான 36 வயதுடைய சன்ஜய ஜயசிங்க தனதாக்கினார். போட்டியில் அவர் 16.32 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து மறுபடியும் தேசிய சம்பியனாகத் தெரிவாகினார்.

இதனிடையே, இம்முறை தேசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றவரும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரருமான ஸ்ரேசான் தனன்ஜய, 16.12 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரிக்க, கனிஷ்ட வீரரான சந்தருவன் 15.84 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

நிமாலியை வீழ்த்திய கயன்திகா

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனும், இலங்கையின் மத்திய தூர நட்சத்திர வீராங்கனையான நிமாலி லியனாரச்சியை வீழ்த்தி கயன்திகா அபேரட்ன தங்கப் பதக்கத்தை வென்றார்.

போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 17.58 செக்கன்கள் ஓடிமுடித்து அவர் தேசிய சம்பியனாகத் தெரிவாகினார்

இதேநேரம், பெண்களுக்கான 3000 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற நிலானி ரத்னாயக்க (4 நிமி. 21.28 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நடப்புச் சம்பியனான நிமாலி லியனாரச்சி, போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 21.28 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் இராணுவ வீரர் சமன் குமார பெர்னாண்டோ (3 நிமி. 47.86 செக்.) தங்கப் பதக்கம் வென்றார்.

400 மீற்றரில் காலிங்க, நதீஷாவுக்கு தங்கம்

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகிய பிறகு முதல்தடவையாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் களமிறங்கிய காலிங்க குமாரகே, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டி தூரத்தை நிறைவுசெய்ய 46.25 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதன்படி, இம்முறை தேசிய மெய்வல்லுனரில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற வீரராகவும் அவர் இடம்பிடித்தார்

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இராணுவ வீரரான ஆர்.என் ராஜகருணா (47.02 செக்.) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்

இதனிடையே, தேசிய மெய்வல்லுனரில் நடப்புச் சம்பியனும், இறுதியாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான அருண தர்ஷன, வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டித் தூரத்தை 47.04 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.47 செக்கன்களில் நிறைவு செய்த நதீஷா ராமநாயக்க, தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் தேசிய சம்பியனாகத் தெரிவாகினார்.

இதில் நதீஷாவுக்குப் பலத்த போட்டியைக் கொடுத்த இளம் வீராங்கனையான டில்ஷி குமாரசிங்க, (53.81 செக்.) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரிக்க, கனிஷ் வீராங்கனையான ரொமேஷி இஷாரா (57.45 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார்.

எதுஎவ்வாறாயினும், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் நதீஷா  ராமநாயக்க தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<