தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் முதல் நாளில் கிழக்கு வீரர்கள் அபாரம்

813

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

போட்டிகளின் முதல் நாளான இன்று தெரிவுச் சுற்று மற்றும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெற்றதுடன், 5 இறுதிப் போட்டிகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட திருகோணமலையைச் சேர்ந்தவரும், இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்ற ஆர்.வொஷாம் இல்ஹாம், போட்டித் தூரத்தை 14.75 செக்கன்களில் நிறைவு செய்து தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்து எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவானார்.

2011ஆம் ஆண்டு முதல் தடை தாண்டல் போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட இல்ஹாம், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதற்தடவையாக களமிறங்கி போட்டித் தூரத்தை 14.90 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள்

தெற்காசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 3ஆவது..

இதேவேளை, கடந்த வருடம் தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டலில் தங்கப் பதக்கம் வென்ற சாலிந்த ரன்திவ இம்முறை தேசிய மெய்வல்லனர் சம்பியன்ஷிப் தொடரில் 3ஆவது சுற்றில் பங்குபற்றியிருந்ததுடன், குறித்த போட்டியை அவர் 14. 94 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டைமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசிய மட்டத்தில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி இன்று மாலை நடைபெற்றது. 2 பிரிவுகளாக நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் மிப்ரான், 7.34 மீற்றர் தூரம் பாய்ந்து எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவானார்.

இப்போட்டியில் 20 இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டதுடன், அடுத்த சுற்றுக்கான அடைவு மட்டமாக 7.30 மீற்றர் தூரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் முதல் முயற்சியிலேயே மிப்ரான் அந்த இலக்கை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.72 மீற்றர் நீளம் பாய்ந்து தேசிய விளையாட்டு விழாவில் தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பதிவு செய்த மிப்ரான், 42 வருடகால தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் முதற்தடவையாக தேசிய மட்டத்தில் சிறந்த மெய்வல்லுனராக தெரிவானமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக தேசிய அரங்கில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொடர் வெற்றிகளைப் பதிவு செய்த மிப்ரான், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தென் கொரிய திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில் முற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டியொன்றில் பங்கேற்றிருந்தார்.

பல சாதனைகளுடன் நிறைவுற்ற ஆசிய மெய்வல்லுனர் தெரிவுகாண் போட்டிகள்

நடைபெறவிருக்கும் ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணியை..

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான தெரிவுப் போட்டிகளில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்கேற்ற மிப்ரான், 7.73 மீற்றர் தூரம் பாய்ந்து ஒரு சென்றி மீற்றர் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக 2ஆவது இடத்தைப் பெற்றுக்கெண்டார். எனினும் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கான தெரிவுப் போட்டியில் பங்கேற்ற அவர், 7.65 மீற்றர் தூரம் பாய்ந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டாலும், ஆசிய போட்டிகளுக்கான அடைவு மட்டத்தை அவரால் அடைய முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று மாலை நடைபெற்றதுடன், இதன் முதல் சுற்றில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மொஹமட் அஷ்ரப் முதலிடத்தைப் பெற்று நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவானார். அவர் குறித்த போட்டியை 10.87 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு அனுபவமிக்க வீரரான ராஜாஸ் கானும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும் இப்போட்டியில் தெற்காசிய சம்பியனான ஹிமாஷ ஏஷான், தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் அசத்தி வருகின்ற தென் மாகாணத்தைச் சேர்ந்த வினோத் சுரன்ஜய டி சில்வா, இன்று நடைபெற்ற 100 மீற்றர் தகுதிகாண் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்ககது.

இந்நிலையில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் இறுதிப் போட்டியில் கடந்த 4 தடவைகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வென்றிருந்தவரும், இப்போட்டியில் கடந்த 10 வருடங்களாக தேசிய சாதனையை தனது பெயரில் கீழ் பதிந்துள்ள கயான் ஜயவர்தன, 50.77 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரும், இலங்கை இராணுவத்தில் விளையாடி வருகின்றவருமான மொஹமட் ஆசிக், 42.48 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்காக பரிதி வட்டம் எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த வீராங்கனைகளான பி.கே.ஏ.ஏ மதுவன்தி 41.77 மீற்றர் தூரத்துக்கு எறிந்து முதலிடத்தையும், எம்.எஸ்.கே வீரசேகர 41.50 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தையும், வி.வி லக்மாலி 39.40 மீற்றர் தூரத்தை எறிந்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், பெண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த சி.எம் திலகரத்ன 5.93 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தொடரந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 554 வீரர்களும், 183 வீராங்கனைகளும் கலந்துகொண்டிருந்ததுடன், தேசிய மட்டத்தில் முன்னிலை வகிக்கின்ற அனைத்து வீரர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய, ஆசிய மற்றும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராகவும் இது அமையும் எனவும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.

Tamil Interview with hatrick gold medal winner Saundarraja Baluraj

Uploaded by ThePapare.com on 2017-08-24.