சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் சந்துன், டில்னி சிறந்த வீரர்களாக முடிசூடல்

92nd Ritzbury Sir John Tarbat Senior Athletics Championship 2024

109
92nd Ritzbury Sir John Tarbat Senior Athletics Championship 2024

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் 92ஆவது தடவையாகவும் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் இன்று (03) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

கடந்த 30ஆம் திகதி முதல் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வந்த சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வருடத்தின் அதி சிறந்த சிரேஷ்ட மெய்வல்லுனராக வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் சட்டவேலி ஓட்ட வீரர் சந்துன் கோசலவும், பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனராக அதே பாடசாலையைச் சேர்ந்த நீளம் பாய்தல் வீராங்கனை டில்னி நெத்சலா ராஜபக்ஷவும் தெரிவாகினர்.

இந்தியாவில் அண்மையில் நிறைவுக்கு வந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சந்துன் கோசல, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.10 செக்கன்களில் ஓடி முடித்து, உலக மெய்வல்லுனர் புள்ளிப்பட்டியலில் 1048 புள்ளிகளைப் பெற்று சிறந்த ஆண் மெய்வல்லுனருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

அதேநேரம், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.12 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனை நிகழ்த்திய டில்னி நெத்சலா ராஜபக்ஷ, உலக மெய்வல்லுனர் புள்ளிப்பட்டியலில் 1025 புள்ளிகளை எடுத்து, சிறந்த பெண் மெய்வல்லுனருக்கான விருதையும், சிறந்த நீளம் பாய்தல் வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் தங்கப் பதக்கம் வென்ற கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த லெசந்து அர்த்தவிது, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.13 மீற்றர் உயரத்தை தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததுடன், வருடத்தின் சிறந்த உயரம் பாய்தல் வீரராகவும் தெரிவானார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.10 செக்கன்களில் ஓடி முடித்து குறித்த வயதுப் பிரிவில் 22 ஆண்டுகால இலங்கை சாதனையை சமப்படுத்திய கந்தான புனித செபஸ்டியன் கல்லூரியைச் சேர்ந்த ஒமெல் ஷஷிந்த சில்வா, வருடத்தின் சிறந்த 400 மீற்றர் ஓட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

காலி மஹிந்த கல்லூரியைச் சேர்ந்த அயேஷ் மிஹிரங்க, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 10.74 செக்கன்களில் ஓடி முடித்து, வருடத்தின் அதிவேக வீரராகத் தெரிவாக, 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 12.27 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கம் வென்ற கொழும்பு கேட்வே கல்லூரியின் ஷெனெல்லா செனவிரத்ன வருடத்தின் அதிவேக வீராங்கனையாகவும் தெரிவாகினார்.

இதற்கிடையில், மத்திய தூர ஓட்ட வீராங்கனையான தருஷி அபிஷேகா, 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள் 35.84 செக்கன்களில் நிறைவு செய்து தனது மூன்றாவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். முன்னதாக அவர் பெண்களுக்கான 3000 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

இதேநேரம், வருடத்தின் அதிசிறந்த ஆண்கள் பாடசாலைக்கான சம்பியன் பட்டத்தை வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியும், அதி சிறந்த பெண்கள் பாடசாலைக்கான விருதை வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலை அணியும் பெற்றுக் கொண்டன.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 12ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்கிய இம்முறை சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 3000 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.

16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற இம்முறை சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 2 இலங்கை சாதனைகளும், 14 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. போட்டிகளின் முதல் நாளில் இரண்டு போட்டிச் சாதனைகளும், இரண்டாவது நாளில் ஒரு இலங்கை சாதனையுடன் 5 போட்டிச் சாதனைகளும், 3ஆவது நாளான நேற்று ஒரு இலங்கை சாதனையுடன், 5 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில், போட்டித் தொடரின் இறுதி நாளான இன்றைய தினம் எந்தவொரு சாதனைகளும் நிகழ்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தமிழ் பேசும் வீரர்கள் பெரிதளவில் பிரகாசிக்கவில்லை. மலையகம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒருசில பாடசாலை மாணவர்கள் பதக்கங்களை வென்று அசத்திய போதிலும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலைகளின் பங்குபற்றல் இம்முறை போட்டித் தொடரில் குறைவாகவே காணப்பட்டது. அதிலும் குறிப்பாக, யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வீரர்கள் கோலூன்றிப் பாய்தலில் 2 தங்கம் மற்றும் ஓரு வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சேர்ந்த பாடசாலைகளின் பங்குபற்றலும் இம்முறை போட்டித் தொடரில் குறைவாகவே காணப்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இது இவ்வாறிருக்க, சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான இன்று (03) நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீராங்கனை பி. அபிலாஷினி (3.01 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், அதே பாடசாலையைச் சேர்ந்த ஏ. கோஷிகன் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.50 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதனிடையே, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.88 செக்கன்களில் நிறைவு செய்த கண்டி திரித்துவக் கல்லூரியின் எம்.ஏ ரிபாய் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். முன்னதாக இவர், ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<