கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளான நேற்று (02) புதிய இலங்கை சாதனையுடன், 5 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் 4 போட்டிச் சாதனைகள் 4X100 அஞ்சலோட்டப் போட்டியில் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதன்படி, இம்முறை சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3 நாட்கள் நிறைவடையும், 2 இலங்கை சாதனைகளும், 14 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கந்தான புனித செபஸ்டியன் கல்லூரியின் ஒமெல் ஷஷிந்த சில்வா, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் 22 ஆண்டுகால இலங்கை சாதனையை சமன் செய்தார்.
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒமெல், போட்டியை 47.10 செக்கன்களில் கடந்து, இலங்கையின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுனரும், 400 மீற்றர் ஓட்ட வீரருமான மனோஜ் புஷ்பகுமார 2002 இல் நிலைநாட்டிய சாதனையை இவர் சமப்படுத்தியிருந்தார். இருப்பினும், ஒமெல் சில்வா பதிவு செய்த காலப் பெறுமதி போட்டிச் சாதனையாக இடம்பெறவில்லை.
- சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் துதிதர்ஷிதன், விஹாஷுக்கு தங்கம்
- சதேவ் வரலாற்று சாதனை; திவாகர், விதுஷனுக்கு இரட்டைப் பதக்கம்
இதேவேளை, இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்லோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்த சக வீரரான வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த சதேவ் ராஜகருணா, 47.41 செக்கன்களில் போட்டியை ஓடிமுடித்து முந்தைய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
16 வயதுக்குட்பட்ட ஆண்;களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த டபிள்யூ.என். விஷால் 49.76 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனை படைத்தார்.
இது தவிர, நேற்று நடைபெற்ற 4X100 மீற்றர் அஞ்லோட்டப் போட்டியில் 4 போட்டிச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதன்படி, வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை, கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியன புதிய போட்டிச் சாதனைகளை படைத்தன.
வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி, 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்லோட்டத்தை 44.18 செக்கன்களிலும், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்லோட்டத்தை 49.02 செக்கன்களிலும் ஓடி முடித்து சாதனை படைத்தது. அதேபோல, கொழும்பு கேட்வே கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட 4X100 பெண்கள் அஞ்லோட்ட அணி 48.49 செக்கன்களிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட 4X100 ஆண்கள் அஞ்சலோட்ட அணி 41.45 செக்கன்களிலும் போட்டியை நிறைவு செய்து சாதனை படைத்தன.
இதனிடையே, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியின் ஏ. கமில்டன், 6.84 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அத்துடன், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜானன், 3.80 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். இம்முறை சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரரொருவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
>>Photos – 92nd Ritzbury Sir John Tarbat Senior Athletic Championship 2024 – Day 03<<
இது தவிர, .18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார் – தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை யு.ஜதுர்சிகா வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
இதேவேளை, கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி தினம் இன்றாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<