சதேவ் வரலாற்று சாதனை; திவாகர், விதுஷனுக்கு இரட்டைப் பதக்கம்

92nd Ritzbury Sir John Tarbat Senior Athletics Championship 2024

114

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளான நேற்று (01) புதிய இலங்கை சாதனையுடன், 5 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.  

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.52 செக்கன்களில் நிறைவு செய்து சதேவ் ராஜகருணா புதிய இலங்கை சாதனை படைத்தார். முன்னதாக 2015இல் கொழும்பு லும்பினி கல்லூரியின் சலித் பியூமால் 21.87 செக்கன்களில் ஓடிமுடித்து நிலைநாட்டிய சாதனை அவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்தார் 

வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த சதேவ், அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியிலும் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியை 21.54 செக்கன்களில் ஓடிமுடித்து 2ஆவது இடத்தைப் பிடித்த கந்தானை புனித செபஸ்டியன்ஸ் கல்லூரியின் எஸ். சில்வா, முந்தைய இலங்கை சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் உலக கனிஷ்; மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய ஹட்டன்அம்பகமுவ மத்திய கல்லூரி வீரர் அயோமல் அகலங்க 52.14 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார் 

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கம்பளை, விக்கிரபாகு மத்திய கல்லூரியைச் சேர்ந்த தருஷி அபிஷேகா, 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 10.15 செக்கன்களில் கடந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார். முன்னதாக இவர், போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 800 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையைச் சேர்ந்த 16 வயதுடைய சவிந்து அவிஷ்க, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடமும், 53.66 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார் 

இது தவிர, 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் என். வில்லத்தர (மாத்தறை ராகுல கல்லூரி), 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பி. சஹேலி (நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியாஸ்திரிகள் மடம்) ஆகிய வீரர்கள் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர் 

இதேவேளை, சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளான நேற்று தமிழ் பேசும் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர் 

இதில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் கே. திவாகர் (6 நிமிடங்கள் 22.23 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், திகன ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீரர் ஆர். விதுஷன் (6 நிமிடங்கள் 22.29 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். இப்போட்டியில் வலல்ல பாத்ததும்பற மகா வித்தியாலயத்தின் ஆர். விக்ரமசிங்க (6 நிமிடங்கள் 22.03 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றார் 

Photos – 92nd Ritzbury Sir John Tarbat Senior Athletic Championship 2024 – Day 02

முன்னதாக, போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் இந்த 2 வீரர்களும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

இதனிடையே, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 53.52 செக்கன்களில் நிறைவு செய்து கண்டி திரித்துவக் கல்லூரியின் எம். ரிபாய் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.   

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலையின் ஆர். கரீம் (7.07 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 18.65 செக்கன்களில் நிறைவு செய்த மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் மகளிர் கல்லூரி வீராங்கனை பாத்திமா முத்தலிப் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். 

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<