BPL தொடரில் ஒன்பது இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு

2689

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் அதில் இதுவரை இலங்கையினைச் சேர்ந்த 09 வீரர்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

சனத் ஜயசூரிய, அப்ரிடி, அக்தார், முரளி ஒரே அணியில்

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 21ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (27) டாக்காவில் நடைபெற்ற போதே இலங்கை வீரர்களும், தொடரில் பங்கெடுக்கும் வெவ்வேறு அணிகளால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரரான தனுஷ்க குணதிலக்க போர்ச்சியூன் பரிசால் (Fortune Barisal) அணியினால் வாங்கப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவரும் அதிரடி துடுப்பாட்டவீரருமான பானுக்க ராஜபக்ஷ குல்னா டைகர்ஸ் அணியினால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். அதோடு, குல்னா டைகர்ஸ் அணி இலங்கை அணியின் முன்னாள் அதிரடி சகலதுறைவீரர் திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன ஆகியோரினையும் ஏலம் மூலமாக ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

அதேவேளை குசல் மெண்டிஸ் குமிலா விக்டோரியன்ஸ் அணிக்காகவும், இசுரு உதான டாக்கா அணிக்காகவும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வனிந்து ஹஸரங்கவும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவிருப்பதோடு, தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகியோர் இந்த தொடரில் சில்ஹட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<