2016/17 வருடத்துக்கான முதன்மை ஒப்பந்தங்களை 80 உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் பிரத்தியேகமான நிகழ்ச்சி, விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நிகழ்வின் பிரதான அம்சமாக 18-20 வயதுக்கு இடைப்பட்ட 16 திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி கொடுப்பனவாக ரூ. 200,000 வழங்கப்பட்டது. இவ்வீரர்கள் அனைவரும் அநேகமாக, 19 வயதுகு உட்பட்ட இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் அதே சமயத்தில் அவர்களில் சிலர், இலங்கை A அணி, ஒருநாள் அணி உட்பட இலங்கை டெஸ்ட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் ஆவர்.
இலங்கை வளர்ந்து வரும் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இளம் வீரர் சரித் அசலங்க கூறுகையில், ”நிதி மற்றும் சலுகைகள் வழங்கப்படுவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், ஏனென்றால் எங்களுக்குரிய கிரிக்கெட் மட்டைகள் மற்றும் உபகரணங்களை வாங்குவது எளிதல்ல. அவை மிகவும் விலை உயர்ந்தவை” என்று தெரிவித்தார்.
இளையோர், வளர்ந்துவரும் மற்றும் மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஆகிய பிரிவுகளில் முறையே ரூ. 40,000, ரூ. 75,000 மற்றும் ரூ. 100,000 வரை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். அதேநேரத்தில் சிறப்பு குழு முலம் தெரிவு செய்யப்பட்ட இவ்வீரர்கள் அனைவரும் வயது, தேசிய மட்டங்களில் பங்கு பற்றியமை மற்றும் 2015/16ஆம் ஆண்டுகளில், உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால இந்நிகழ்ச்சியின் போது கருத்து தெரிவிக்கையில் “பாடசாலை மற்றும் உள்ளூர் கிரிக்கெட், இலங்கை தேசிய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. அதனால் இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து இவைகளை மேம்படுத்த வேண்டும். அதன் காரணமாகத்தான் நாங்கள் உள்ளூர் கிரிக்கெட்டினை படிப்படியாக வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிதிக் கொடுப்பனவு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.
மேலும், இவ்வீரர்கள் அனைவருக்கும் பிரத்தியேகமான காப்புறுதி வழங்கப்படும். அதே நேரம் இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் கிடைக்கக்கூடிய எந்தவொரு வளங்களையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி உள்ளது.
அத்துடன், 65 உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் வருடத்திற்கான ஒப்பந்தங்கள் ஒக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட ஒருசில ஒப்பந்தங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறாத வீரர்களும் உள்ளடக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ”உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு எங்களுக்கு, அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. அவர்கள் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று விளையாடக்கூடாது. எங்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அவர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும். பாடசாலை மற்றும் மூத்த கிரிக்கெட் வீரர்களை வலுப்படுத்தும் அதே நேரம் வீரர்களை பாராட்டும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஒரு புதிய செயற்திட்டம் ஆகும்” என்று தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
20 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் – சரித் அசலங்க, லஹிரு குமார, அவிஷ்க பெர்னாண்டோ, விஷாத் ரந்திக, சம்மு அஷான், அசித்த பெர்னாண்டோ, வனிது ஹசரங்க, டிலான் ஜயலத், லசித் எம்புல்தெனிய, கமின்ந்து மெண்டிஸ், சஞ்சுல அபேவிக்ரம, பத்தும் நிஸ்ஸங்க, அஷேன் பண்டார, நவீந்து நிர்மல், தமித சில்வா, கிருஷ்ணன் சஞ்சுல.
இளையோர் கிரிக்கெட் வீரர்கள் – மனோஜ் சரத்சந்திர, கவிந்து குலசேகர, சதீர சமரவிக்கிரம, ரமேஷ் மெண்டிஸ், ப்ரியமல் பெரேரா, சஹன் நாணயக்கார, லஹிரு மிலந்த, மினோத் பானுக, பபஸார வடுகே, லசித் அபேரத்ன, சந்துன் வீரக்கொடி, தரிந்து ரத்நாயக்க, ஏஞ்சலோ ஜயசிங்க, அணுக் பெர்னாண்டோ, செஹான் மதுஷங்க, ஹஷான் துமிந்து, பினுர பெர்னாண்டோ, அகில தனஞ்சய, கசுன் ராஜித.
வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்கள் – ஏஞ்சலோ பெரேரா, மதுக்க லியனபதிரன, சஞ்சய சதுரங்க, லஹிரு மதுஷங்க, பானுக ராஜபக்ஷ, உமேஷ் கருணாரத்ன, தரிந்து கௌஷல், கமிந்து கனிஷ்க, முஹம்மத் டில்ஷாத், கசுன் மதுஷங்க, ருமேஷ் புத்திக, விமுக்தி பெரேரா, தெனுவன் ராஜகருணா, தில்ஷான் முனைவீர, மதவ வர்ணப்புர, மலிந்த புஷ்பகுமார, சசித்திர சேரசிங்க, பிரபாத் ஜயசூரிய, ஷாலிக்க கருணாநாயக்க, செஹான் ஜயசூரிய, விஷ்வ பெர்னாண்டோ, ரமித் ரம்புக்வெல்ல, உதார ஜயசுந்தர, சதுரங்க டி சில்வா, அஷான் ப்ரியஞ்சன், சமிந்த பண்டார, லஹிரு கமகே, இசுரு உதான.
மூத்த கிரிக்கெட் வீரர்கள் – மஹேல உடவத்த, ஜீவன் மெண்டிஸ், பர்வீஸ் மஹ்ரூப், சுராஜ் ரன்திவ், ஜெஹான் முபாரக், நிசால் ரந்திக்க, சாமர சில்வா, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ், நுவன் குலசேகர, ஹசந்த பெர்னாண்டோ, கோசல குலசேகர, ஹர்ஷ விதான, கயான் சிரிசோம, தினுக் ஹெட்டியாராச்சி, திலின துஷார மிரண்டோ, தில்ஹார பெர்னாண்டோ, TN சம்பத், சரித்த புத்திக்க, அசேல குணரத்ன, நதீர நாவல.