தர்மபால கல்லூரி, பன்னிபிடிய மற்றும் ராஹுல கல்லூரி மாத்தறை ஆகிய கல்லூரிகளுக்கு இடையிலான ருஹூனு மாயா பெரும் சமர், 6ஆவது தடவையாகவும் நடைபெற்றது. டி சொய்சா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தர்மபால கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
அதன்படி களமிறங்கிய ராஹுல கல்லூரி லக்கிந்து சமோத்ய (55) பெற்றுக் கொடுத்த அரைச்சதத்தின் உதவியுடன் 210 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. அவருக்கு சிறப்பான பங்களிப்பினை வழங்கிய பினுர சங்கீத் மற்றும் சசித் மனுரங்க முறையே 38 மற்றும் 32 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர்.
இதன்படி 75.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அவ்வணி ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. தர்மபால கல்லூரி சார்பாக பந்துவீச்சில் அசத்திய சமிந்து சமரசிங்க 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தர்மபால கல்லூரி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அபாரமாக பந்துவீசிய நுவன் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்த தர்மபால கல்லூரி 114 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்திலும் சிறப்பித்த சமிந்து சமரசிங்க அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
96 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ராஹுல கல்லூரி துரிதமாக ஓட்டங்கள் குவிக்க ஆரம்பித்தது. 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ஓட்டங்களை குவிந்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பிருன ஹேவமத்தும அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். தர்மபால கல்லூரி சார்பில் துலாஜ் எகொடகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
177 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தர்மபால கல்லூரி, சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து 41 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்து கொண்டது.
போட்டியின் சுருக்கம்
ராஹுல கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 210/9d (75.2) – பினுர சங்கீத் 38, பாக்கிய ஹிமத் 24, லக்கிந்து சமோத்ய 55, சசித் மனுரங்க 32, சமிந்த சமரசிங்க 4/61
தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்) – 114 (49) – சமிந்து சமரசிங்க 36, நுவன் மதுஷங்க 5/54, பசன் சமரதுங்க 3/21
ராஹுல கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 80/6d (15) – பிருன ஹேவாமத்தும 28, துலாஜ் எகொடகே 3/16, அவிஷ்க ஹசரிந்த 2/13
தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (இரண்டாவது இன்னிங்ஸ்) – 41/3 (19) – பசன் சமரதுங்க 2/26
முடிவு: போட்டி சமநிலையில் நிறைவு