ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 2ஆவது பதக்கதுக்கு குறிவைத்துள்ள தனஞ்சனா

6th Asian youth Athletic Championship 2025

11
Dhananjana

சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 6ஆவது 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 3ஆவது நாளான நேற்றைய தினம் (17) நடைபெற்ற போட்டிகளில் இலங்கை வீரர்களால் பதக்கங்களை வெல்ல முடியாமல் போனாலும், பெண்களுக்கான 200 மீற்றர், ஆண்களுக்கான 800 மீற்றர் மற்றும் ஆண்களுக்கான கலவை அஞ்சலோட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர்கள் தகுதி பெற்றனர்.  

ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற சவிந்து நிமாஷ டயஸ், 54.03 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். 

இதற்கிடையில், மகளிர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சன்சலா ஹிமாஷனி, துரதிஷ்டவசமாக, தடுக்கி விழுந்ததால் சிறிது தாமதத்துடன் போட்டியை முடித்தார். அவர் போட்டியை ஒரு நிமிடம் 08.69 செக்கன்களில் முடித்து 8ஆவது இடத்தைப் பிடித்தார். 

இதற்கிடையில், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தனஞ்சனா செவ்மினி, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் சுற்றை 24.42 செக்கன்களில் ஓடி இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 

இதேவேளை, ஆண்களுக்கான 200 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட இமேஷ் சில்வா, 21.76 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், ஆண்களுக்கான 800 மீட்டர் தகுதிகாண் சுற்றை ஒரு நிமிடம் 55.82 செக்கன்;களில் ஓடி முடித்த சசிந்து அவிஷ்க இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், அதே போட்டியில் முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற ரெஹான் பெரேரா, 7ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 

மேலும், ஆண்களுக்கான கலவை அஞ்சலோட்டத்துக்கான இரண்டாவது தகுதிகான் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினர் அப் போட்டியை ஒரு நிமிடம், 54.68 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். 

இலங்கை அஞ்சலோட்ட அணியில் சத்துஷ்க இமேஷ் சில்வா, இரேஷ் மதுவன்த போகொட, பசிந்து சந்தருவன் சில்வா, ஷானுக்க நெத்மல் கொஸ்தா ஆகியொர் இடம்பெற்றனர். 

இதேவேளை, 6ஆவது 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இதுவரை இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இன்று (18) போட்டியின் கடைசி நாளாகும் 

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<