கிரிக்கெட் வீரர்களை செல்வந்தர்களாக்கும், கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 11ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தமது பயிற்சி முகாம்களை ஆரம்பித்துள்ள நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதன் நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் …
இது இவ்வாறிருக்க, கடந்த காலங்களைப் போல உலகின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இம்முறை ஐ.பி.எல் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில், ஒருசில நட்சத்திர வீரர்களின் திடீர் விலகல் மற்றும் உபாதைகள் இம்முறை ஐ.பி.எல் தொடரில் சில அணிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஐ.பி.எல் ரசிர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக ஐ.பி.எல் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 15 வீரர்களில் 5 வீரர்கள் இம்முறை போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளமை மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.
எனவே, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின் மூலம் பலத்த போட்டிக்கு மத்தியில் அணிகளுக்கு தெரிவாகி, இறுதி நேரத்தில் இத்தொடரிலிருந்து விலகிக் கொண்ட ஒருசில முக்கியமான வீரர்களைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
டேவிட் வோர்னர்
தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டமை நிரூபணமாகியது. இதனையடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருட போட்டித் தடை விதித்தது.
இதனால் வோர்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் இவ்வருட ஐ.பி.எல். தொடரிலிருந்து தாமாகவே விலகியதுடன், தமது தலைவர் பதவிகளையும் இராஜினாமாச் செய்தனர்.
மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக.. இந்திய கிரிக்கெட் …
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வோர்னருக்குப் பதிலாக இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும், இடது கை துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேராவை அணுகியது. எனினும், தற்போது நடைபெற்று வருகின்ற மாகாணங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் அவர் அந்த அழைப்பை நிராகரித்தார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத இங்கிலாந்து அணியின் 29 வயதான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதேநேரம், கடந்த பருவகாலத்தில் சன்ரைசஸ் அணியின் தலைவராக செயற்பட்ட டேவிட் வோர்னரின் தலைமைப் பதவியை நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு வழங்க சன்ரைசஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஸ்டீவன் ஸ்மித்
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துக்குப் பதிலாக தென்னாபிரிக்க அணியின் ஹெயின்ரிக் கிளாசனை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இம்முறை ஐ.பில்.எல் போட்டிகளுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
26 வயதான கிளாசன் இதுவரையில் 3 சர்வதேச T-20 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். இதில் இந்திய அணிக்கெதிரான பிங்க் டே T-20 போட்டியில் கிளாசன் 27 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
இதில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான சஹால் மற்றும் குல்டீப் யாதவ்வின் பந்துவீச்சை கிளாசன் வெளுத்து வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, முன்னதாக ஏலத்தில் கிளாசனுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாவுக்கே அவரை வாங்கியுள்ளது.
இதேநேரம், ஸ்மித் இம்முறை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காததால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக, அஜிங்கியா ரஹானேவை நியமிக்கவும் அவ்வணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஸ்டீவன் ஸ்மித்தை 12 கோடிகளுக்கு மீள வைத்திருந்த நிலையில், ஹைதராபாத் அணி டேவிட் வோர்னரை 12 கோடிகள் கொடுத்து தக்கவைத்திருந்தது.
தற்போது டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விலகியிருப்பது இவ்வருட ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்செல் ஸ்டார்க்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடவிருந்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஸ்டார்க்கின் வலது கால் தசையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில் அவரது உபாதை தொடர்ந்து வருவதால் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணி தங்களது அணியின் முதன்மை பந்து வீச்சாளராக கருதி, ஸ்டார்க்கை 9.4 கோடிக்கு வாங்கியிருந்தது. தற்போது அவரை இழந்துள்ள அணி, மற்றுமொரு பந்து வீச்சாளரை அணிக்குள் அழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இம்முறையும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஸ்டோக்ஸ்
கோடைகாலத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும், இந்தியன் பிரிமியர் லீக் …
இதன்படி, ஸ்டார்க்குக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டொம் குர்ரானை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுவரை 6 T-20 போட்டிகளில் விளையாடியுள்ள குர்ரான், 7 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளார். எனினும், உள்ளூர் போட்டிகளில் அவரது அண்மைக்கால திறமைகளைக் கருத்திற்கொண்டு கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜேசன் பெஹ்ரண்டோர்ப்
இம்முறை ஐ.பி.எல் தொடரில் நடப்பு சம்பியனாக பங்கேற்க உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்திலேயே பாரிய இழப்பொன்றை சந்தித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி, அவர்களின் கடந்த பருவத்தில் விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான லசித் மாலிங்க மற்றும் மிட்செல் மெக்லெனகன் ஆகியோரை கைவிட்டு புதிய வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியது.
அதிலும் தங்கள் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அவுஸ்திரேலிய அணியின் இளம் வீரர் ஜேசன் பெஹ்ரண்டோர்ப்பை 1.5 கோடிக்கு வாங்கியது.
ஆனால் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகு உபாதை காரணமாக இவ்வருட ஐ.பி.எல். தொடரிலிருந்து தான் விலகுவதாக ஜேசன் அறிவித்துள்ளார்.
இதனால் பல வீரர்களை தேடிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் கடந்த பருவத்தில் விளையாடிய நியூசிலாந்து அணியின் மிட்செல் மெக்லெனகனை மீண்டும் அணிக்குள் அழைத்துள்ளது.
இவர் கடந்த வருடம் மும்பை அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 19 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனினும் இவர் ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகவில்லை.
ஆனால், தற்போது மும்பை அணி மிட்செல் மெக்லெனகனுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒரு கோடியை வழங்கி மீண்டும் அணிக்குள் அழைத்துள்ளது.
மிட்செல் சாண்ட்னர்
இங்கிலாந்து அணிக்கெதிராக அண்மையில் நிறைவுக்கு வந்த ஜேசன் T-20 போட்டியின் போது நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் மிட்செல் சாண்ட்னர் உபாதைக்குள்ளானார். இதனையடுத்து, இம்முறை ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அவர் விலகிக் கொண்டார்.
கண்ணீருடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வோர்னர்
கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், …
சாண்ட்னர் மிகவும் சிக்கனமான முறையில் சுழற்பந்து வீசுவதோடு, பின் வரிசையில் களமிறங்கி அபாரமாக துடுப்பொடுத்தாடுகின்ற திறமையைக் கொண்ட வீரராவார். அதிலும், சமீபத்தில் இங்கிலாந்து பந்து வீச்சுக்கு தன் மட்டையின் மூலம் அதிரடியை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, அவர் இம்முறை ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் டோனியின் வலதுகரமாகச் செயல்படுவார் என்ற ஆவல் அனைவரிடமும் காணப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் துரதிஷ்டவசமாக காயமடைந்தார், ஸ்கேன் பரிசோதனையில் முழங்கால் எலும்பில் முறிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டு என வைத்தியர்கள் சாண்ட்னருக்கு அறிவுறுத்தியிருந்தனர். இதனால் எதிர்வரும் 9 மாதங்களுக்கு அவரால் எந்தவொரு போட்டியிலும் விளையாட முடியாது போய்விட்டது.
இந்நிலையில், சாண்ட்னரின் இடத்துக்கு புதிய வீரரொருவரை சென்னை அணி, இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
நேதன் கோல்டர் நைல்
இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான நேதன் கோல்டர் நைல், உபாதை காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.
முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர்
பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அப்பால் அந்த …
கடந்த நவம்பர் மாதம் முதல் எலும்பு முறிவு உபாதையினால் பாதிக்கப்பட்ட நேதன், உபாதையிலிருந்து இதுவரை குணமடையவில்லை. இதன் காரணமாக இம்முறைப் போட்டித் தொடரில் அவரின் பங்கேற்பு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
2013ஆம் ஆண்டு முதற்தடவையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய நேதன், இம்முறை ஏலத்தில் 2.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான கோரி அண்டர்சனை ஒப்பந்தம் செய்ய ரோயல் செலன்ஞர்ஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
எனினும், முன்னதாக நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் அண்டர்சனை வாங்க எந்தவொரு அணியும் முன்வரவில்லை.
இதுவரை 27 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 8 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளார். அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.