இலங்கை பின்கள வீராங்கனைகளின் தவறால் 5 ஆவது SAFF மகளிர் சம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் அரையிறுதியில் நேபாள அணியிடம் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
நேபாளத்தின் பிராத்நகர் சஹித் ரங்கசாலா அரங்கில் புதன்கிழமை (20) நடைபெற்ற அரையிறுதியில் இலங்கை மகளிர்கள் கடைசி நேரத்தில் இழைத்த தவறுகளை பயன்படுத்தி நேபாள வீராங்கனைகள் உறுதியான வெற்றி ஒன்றை பெற்றனர்.
இலங்கை மகளிர் கால்பந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
மாலைதீவுகள் அணியை 2-0 என தோற்கடித்து B குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்தே இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது. எனினும் இந்தியாவுடனான போட்டியில் இலங்கை 0-5 என தோற்றது. எனினும் A குழுவில் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை தலா 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நேபாளம் அந்தக் குழுவில் முதலிடத்தை பிடித்தது.
ஆரம்பத்திலேயே பலம் கொண்ட நேபாளத்தை சமாளிக்க இலங்கை மகளிர்கள் தற்காப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். எனினும் போட்டி முழுவதிலும் நேபாள வீராங்கனைகள் பந்தை அதிக நேரம் தம் வசம் வைத்திருந்ததை காண முடிந்தது.
அனிதா பஸ்னத் மற்றும் சபித்ரா இருவருக்கும் போட்டியின் ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் கிட்டியபோது ஓர் உதை கோல்கம்பத்திற்கு வெளியே சென்றதோடு மற்றொன்று அயோமி விஜேரத்னவிடம் நேராக சென்றது.
நேபாளத்திற்கு பொன்னான சந்தர்ப்பம் 34 ஆவது நிமிடத்தில் கிட்டியது. கீதா ரானி கோனரில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி வலைக்குள் செலுத்த முயன்றபோதும் அயோமியால் அதனை தடுக்க முடிந்தது.
முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களே இருக்கும்போது தொலைவில் இருந்து உதைத்த ப்ரீ கிக் பந்து கோல் வாய்ப்பை தந்தது. அப்போது இலங்கை பின்கள வீராங்கனைகள் ஆபத்தை தவிர்க்க தவறிய நிலையில் பூனம் மகர் பந்தை கோலாக மாற்றினார்.
முதல் பாதி ஆட்டம் முடிவுறும் நேரத்தில் பன்டாரி தலையால் முட்டிய பந்து கோலுக்கு சில அங்குலம் இடைவெளியில் வெளியேறியது.
முதல் பாதி: நேபாளம் 1 – 0 இலங்கை
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இதே நிலை தான் தொடர்ந்தது. நிரு தபா வலதுபுறத்தால் முன் சென்று கோல் பெறும் வாய்ப்பு இருந்தபோதும் அவரது முயற்சி போதிய வலிமையின்றி திசை தவறியதாக இருந்தது. பன்டாரி மற்றும் தாபா இருவரினதும் இலக்கு தவறிய நிலையில் பெனால்டி பெட்டிக்குள் இலங்கையின் செவ்வந்தி மானவடுவின் கையில் பந்து பட்டதை நடுவர் ஜலாலுத்தீன் அவதானிக்கத் தவறினார்.
ஒரு மணி நேரத்தை எட்டும்போது நேபாளத்தின் மற்றொரு கோல் முயற்சியை அயோமி தடுத்தார். கடினமான திசையில் இருந்து பஸ்னட் உதைத்த பந்தை அவர் சிறப்பான முறையில் தட்டிவிட்டார்.
இந்நிலையில் இலங்கை பின்கள வீராங்கனைகள் சிதறுண்டு காணப்பட்டத்தைப் பயன்படுத்திக்கொண்ட பஸ்னட் இரு பின்கள வீராங்கனைகளை மற்றும் கோல்காப்பாளரை முறியடித்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.
இந்திய அணியின் கோல்மழை பொழிவதை தடுத்த அயோமி
இலங்கை வீராங்கனைகளுக்கு 80 ஆவது நிமிடத்திலேயே முதல் கோனர் கிக் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதற்கு இரண்டு நிமிடங்கள் கழித்து பஸ்னட் பரிமாற்றிய பந்தை தலையால் முட்டிய பன்டாரி நேபாளத்திற்கு 3 ஆவது கோலை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் நான்கு நிமிடங்கள் கழித்து 86 ஆவது நிமிடத்தில் ரேக்கா பௌடல் நேபாளத்திற்கு மற்றொரு கோலை போட்டார்.
முழு நேரம்: நேபாளம் 4 – 0 இலங்கை
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீராங்கனை – அனிதா பஸ்னட் (நேபாளம்)
கோல் பெற்றவர்கள்
நேபாளம் – பூனம் மகர் 42′, அனிதா பஸ்னட் 73′, சபித்ரா பன்டாரி 82′, ரேக்கா பௌடல் 86′
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<