உஸ்பெகிஸ்தானில் நேற்று (30) நிறைவுக்கு வந்த 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அம்பகமுவ மத்திய கல்லூரியின் அயோமால் அகலங்க வெண்கலப் பதக்கம் வென்றார்
குறித்த போட்டியை 51.40 செக்கன்களில் நிறைவுசெய்து தனது அதிசிறந்த நேரப் பெறுமதிiயும் பதிவு செய்தார்.
அதுமாத்திரமின்றி, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான 4ஆவது பதக்கத்தையும் அவர் வென்று கொடுத்தார்.
17 வயதான அயோமால் அகலங்க, முன்னதாக 20 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுவதான அடைவு மட்டத்தையும் பூர்த்தி செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே குறித்த போட்டியை 50.91 செக்கன்களில் நிறைவு செய்த கட்டார் வீரர் மஹமத் அபகர் முதலிடத்தையும், 51.38 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இந்திய வீரர் பாபி சன்ஸ்தா இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
- ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்; இலங்கையிலிருந்து எழுவர்
- இலங்கைக்காக வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற துஷேன் சில்வா
- நிலுபுல் வெள்ளிப் பதக்கம் வெல்ல; உபாதையுடன் பதக்கம் வென்றார் கசுனி
இதன்படி, கடந்த 4 நாட்களாக உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 4 பதக்கங்களை வென்று அசத்தியது.
இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் திக்வெல்ல விஜித மத்திய கல்லூரியைச் சேர்ந்த நிலுபுல் பெஹசர மற்றும் பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையைச் சேர்;ந்த கசுனி நிர்மலி விக்ரமசிங்க ஆகியோர் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<