உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது நாளான நேற்று (29) இலங்கைக்காக மேலும் இரண்டு பதக்கங்களை நிலுபுல் பெஹசர மற்றும் கசுனி நிர்மலி ஆகியோர் வென்று கொடுத்தனர்.
ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட திக்வெல்ல விஜித மத்திய கல்லூரியைச் சேர்ந்த நிலுபுல் பெஹசர 2.01 மீட்டர் உயரத்தை தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன் அதே போட்டியில் பங்குகொண்ட லெசந்து அர்த்தவிது 1.90 மீட்டர் உயரத்தை தாவி ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியாக கடந்த ஆண்டு குவைத்தில் நடைபெற்ற நான்காவது இளையோர் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற லெசந்துவுக்கு இம்முறை பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையைச் சேர்ந்த கசுனி நிர்மலி விக்ரமசிங்க வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 2 நமிடங்கள் 17.04 செக்கன்களை எடுத்துக் கொண்டார். குறிப்பாக, காலில் ஏற்பட்ட உபாதையுடன் ஓடி அவர் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்ளுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று அவர் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
- ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்; இலங்கையிலிருந்து எழுவர்
- இலங்கைக்காக வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற துஷேன் சில்வா
இது தவிர, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட அயோமால் அகலங்க, 52.39 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து முதலிடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் இலங்கை அணி இதுவரை 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளது.
இன்று (30) போட்டியின் கடைசி நாளாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<