கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்றைய தினம்(26), 7 போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
இதில், மைதான நிகழ்ச்சிகளைப் போல வேகநடைப் போட்டிகளிலும் வட பகுதி வீர வீராங்கனைர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
முதல் நாள் போட்டிகளின் புகைப்படங்கள்
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ். கிந்துஷன், 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்.
இதன்படி, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் வரலாற்றில் முதற்தடவையாக சுவட்டு மைதான நிகழ்ச்சிகளான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வவுனியா மாவட்டத்துக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த முதல் வீரராக கிந்துஷன் வரலாற்றில் இடம்பிடித்தார்.
முன்னதாக கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியில் கலந்துகொண்ட கிந்துஷன், குறித்த போட்டியை 33 நிமிடங்களும் 56.87 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், போட்டிகளின் கடைசி நாளான நேற்று மாலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் போட்டியிலும் பங்கேற்றிருந்த கிந்துஷன், குறித்த போட்டிப் பிரிவில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற வளல ஏ ரத்னாயக்க கல்லூரி வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து 15 நிமிடங்களும் 56.10 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன், இம்முறை நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான வாய்ப்பினையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
இரண்டாம் நாள் போட்டிகளின் புகைப்படங்கள்
கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த மற்றுமொரு முன்னாள் வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேக நடையில் வடக்கு வீரர்கள் அபாரம்
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இரு பாலாருக்குமான வேகநடை போட்டியில் வவுனியா மெய்வல்லுனர் சங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் தமது அறிமுகப் போட்டியிலேயே வெற்றிகளைப் பதிவு செய்திருந்தனர்.
இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆனந்த ராஜா தனூஷன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்ட அவர் குறித்த போட்டியை 57 நிமிடங்களும், 24.98 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
இதேநேரம், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வேகநடைப் போட்டியில் யாழ். சாவகச்சேரி ரிபர் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஜெயராஜ் சோபனா, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் முதற்டவையாக பங்குபற்றிய அவர், குறித்த போட்டியை ஒரு மணித்தியாலமும் 12.49.96 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய மட்டத்தில் அதிவேக வீரராக மகுடம் சூடிய மொஹமட் சபான்
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட …
இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 3,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் கலந்துகொண்ட ரவிக்குமார் ஹெளசியா, போட்டியை 19 நிமிடங்களும், 42.81 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலுகின்ற அவர், கடந்த 3 மாதங்களாக இப்போட்டிக்கு தயாராகி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இவ்விரு மாணவிகளும், யாழ். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் கதிர்வேல் விஜிதரனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகிள்றனர்.
சம்மெட்டி எறிதலில் ஜெனோஜன் அபாரம்
அண்மைக்காலமாக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சம்மெட்டி எறிதலில் வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற ச. ஜெனோஜன். நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் கலந்துகொண்ட அவர், 32.82 மீற்றர் தூரத்தை எறிந்து தொடர்ச்சியாக 3ஆவது தடவையாகவும் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த 4 வருடங்களாக சம்மெட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றி வருகின்ற ஜெனோஜன், இவ்வருடம் இரத்தினபுரியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவில் சம்மெட்டி எறிதலில் பதக்கமொன்றை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளார்.
பாஷையூர் மாணவிகளுக்கு இரு பதக்கங்கள்
கடந்த காலங்களில் தேசிய மட்ட கனிஷ்ட பளுதூக்கல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். பாஷையூர் புனித அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலய மாணவிகளான ஜே. சுகன்யா மற்றும் மேரி லக்ஷிகா ஆகிய வீராங்கனைகள் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
இதில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் கலந்துகொண்ட ஜே. சுகன்யா, 24.14 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், 22.74 மீற்றர் தூரத்தை எறிந்த மேரி லக்ஷிகா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
அனித்தாவுக்கு அசாதாரணம்
இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் கோலூன்றிப் பாய்தலின் இளவரசியாக வர்ணிக்கப்படும் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.
இரண்டாம் நாள் கனிஷ்ட மெய்வல்லுனரில் மேலும் 9 சாதனைகள் முறியடிப்பு
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட …
தெல்லிப்பலை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவியான அனித்தா, இம்முறை போட்டித் தொடரில் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார்.
எனினும், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் ஒரே ஒரு தேசிய சாதனையை நிலைநாட்டிய அனித்தா, கனிஷ்ட பிரிவுக்குட்படாததால் அவருக்கு அதி சிறந்த மெய்வல்லுனர் விருது வழங்கப்படவில்லை. ஆனாலும் அவருடைய திறமையைப் பாராட்டி முன்னேறிவரும் வீராங்கனைக்கான விருதொன்றையாவது வழங்கியிருக்கலாம் என பலரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
சிறந்த மெய்வல்லுனராக திவங்க தெரிவு
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்திருந்த 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் சிறந்த வீரராக கம்பஹா மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட உஷான் திவங்க தெரிவானார்.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.20 மீற்றர் உயரத்தை தாவிய நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான உஷான் திவங்க இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் புதிய போட்டி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், உஷானின் இந்த சாதனையானது தேசிய மட்டத்தில் 3ஆவது சிறந்த பதிவாக அமைந்துள்ளது. முன்னதாக உயரம் பாய்தல் தேசிய வீரர் மஞ்சுள குமார, 14 வருடங்களுக்கு முன் 2.27 மீற்றர் உயரத்தையும், முன்னாள் வீரரான நளின் பிரியன்த 2.21 மீற்றர் உயரத்தையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
27 போட்டி சாதனைகள் முறியடிப்பு
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து 2,600 வீர வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், 16, 18, 20 மற்றும் 23 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரின் ஒரு தேசிய சாதனையுடன், 27 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 14 சாதனைகளும், பெண்கள் பிரிவில் 13 சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன.
இறுதி நாள் போட்டிகளின் புகைப்படங்கள்
இதேநேரம், நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கில் முதலாவதாக இடம்பெற்ற இப்போட்டித் தொடரில் கனிஷ்ட வீரர்கள் இவ்வாறு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
தெற்காசிய போட்டிகளுக்கான வாய்ப்பு
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொள்ளும் வீரர்களுக்கும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் அடைவு மட்டத்தை பூர்த்தி செய்கின்ற வீரர்களுக்கும் எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இப்போட்டித் தொடருக்கான இறுதிக் குழாம் இதுவரை அறிவிக்கப்படாவிட்டாலும், வட மாகாணத்தில் இருந்து 2 வீரர்களுக்கு தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் சிவகுமார் பிகாஷ்ராஜ் மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மற்றும் 5,000 ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ். கிந்துஷன் ஆகியோருக்கு தெற்காசிய கனிஷ்ட குழாமில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டவுள்ளது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…