இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று (23) காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து 2520 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், 16, 18, 20 மற்றும் 23 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று (23) ஒரு தேசிய சாதனையுடன், 8 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன், கடும் வெயிலுக்கு மத்தியில் வீரர்கள் இவ்வாறு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அனித்தாவினால் இரு சாதனைகள் முறியடிப்பு
இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் கோலூன்றிப் பாய்தலின் இளவரசியாக வர்ணிக்கப்படும் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவியான அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறை போட்டித் தொடரில் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார்.
>> போராட்டத்திற்கு மத்தியில் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா
போட்டியின் ஆரம்ப சுற்றில் 3.30 மீற்றர் உயரத்தைப் பாய்ந்த அனித்தா, 2 ஆவது சுற்றில் 3.50 மீற்றர் உயரத்தைக் கடந்து 2017 இல் மாத்தறையில் நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அவரால் நிலைநாட்டப்பட்ட (3.48 மீற்றர்) தேசிய சாதனையை முறியடித்தார்.
இதனையடுத்து 3.55 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த அனித்தா, முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார். எனினும், இறுதி முயற்சியில் வெற்றி கொண்ட அவர், 2 ஆவது தடவையாகவும் தேசிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.
எனினும், அடுத்த இலக்காக 3.60 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்து போட்டியிட்ட அனித்தா, 3 முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார்.
இறுதியில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், தேசிய சாதனை படைத்து, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5 ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.
ஹெரினாவின் சாதனையை முறியடித்த டக்சிதா
இன்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் என். டக்சிதா, 0.01 மீற்றர் வித்தியாசத்தில் முந்தைய சாதனை முறியடித்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.
இப்போட்டிப் பிரிவில் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 3.01 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சந்திரசேகரன் ஹெரினாவுக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரியின் என். டக்சிதாவுக்கும் பலத்த போட்டி நிலவியது.
ஆரம்ப இரு சுற்றுக்களிலும் முறையே 2.80 மற்றும் 2.90 மீற்றர் உயரங்களை இவ்விரண்டு வீராங்கனைகளும் ஒரே முயற்சியில் தாவி தமது பலத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், 3 ஆவது சுற்றில் 3.00 மீற்றர் உயரத்தை தாவுவதற்கான சவாலில் முதல் முயற்சியிலேயே டக்சிதாவுக்கு வெற்றி கிடைத்தது.
>> கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நாளை முதல் சுகததாஸ விளையாட்டரங்கில்
எனினும், ஹெரினாவினால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்படி, 2.90 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்த சந்திரசேகரன் ஹெரினா, இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஹெரினாவினால் கடந்த வருடம் நிகழ்த்தப்பட்ட 3.01 மீற்றர் போட்டி சாதனையை முறியடிக்கும் நோக்கில் 3.02 மீற்றர் உயரத்தை தனது அடுத்த இலக்காக டக்சிதா நிர்ணயித்தார். இதன் முதலிரண்டு முயற்சியிலும் சோபிக்கத் தவறிய அவர், கடைசி முயற்சியில் தனது இலக்கை எட்டி 0.01 மீற்றர் வித்தியாசத்தில் புதிய போட்டி சாதனை படைத்தார்.
இதனையடுத்து மற்றுமொரு முயற்சியாக 3.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு டக்சிதா தீர்மானித்தார். எனினும், அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 3.02 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கிரிஜா மற்றும் திவ்யாவுக்கு சம இடங்கள்
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அனுபவமிக்க வீராங்கனையான கிரிஜா பாலசுப்ரமணிம் மற்றும் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் திவ்யா ஆகியோர் 2 ஆவது இடங்களை சமமாகப் பெற்றுக்கொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் 3 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீராங்கனைகள் முறையே 3.00 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்திருந்தனர். எனினும், நீர்கொழும்பு நிவ்ஸ்டன் மகளிர் கல்லூரியின் இமேஷா உதேனிக்கு முதலிடத்தை வழங்க போட்டி நடுவர்கள் நடவடிக்கை எடுத்தனர். குறித்த வயதுப் பிரிவில் அவர் முதல் தடவையாக பங்குபற்றி முதல் முயற்சியிலேயே 3.00 மீற்றர் உயரத்தை தாவிய காரணத்தால் அவருக்கு முதலிடம் வழங்கப்பட்டது.
>> 80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை
எனினும், கிரிஜா மற்றும் திவ்யா ஆகிய வீராங்கனைகள் முறையே தமது 3 ஆவது மற்றும் 2 ஆவது முயற்சிகளில் குறித்த அடைவினை பூர்த்தி செய்திருந்த காரணத்தால் அவர்களுக்கு 2 ஆவது இடம் வழங்கப்பட்டது.
உயரத்தை தொட்ட இஷான்
நேற்று காலை நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் கம்பஹா மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட இஷான் திவங்க, 2.20 மீற்றர் உயரத்தை தாவி, புதிய போட்டி சாதனை படைத்தார்.
நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான இஷான், அடுத்த மாத முற்பகுதியில் தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கு தெரிவாகியிருந்த நிலையில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அத்துடன், இஷானின் இந்த சாதனையானது தேசிய மட்டத்தில் 3 ஆவது சிறந்த பதிவாக அமைந்துள்ளது. முன்னதாக உயரம் பாய்தல் தேசிய வீரர் மஞ்சுள குமார, 14 வருடங்களுக்கு முன் 2.27 மீற்றர் உயரத்தையும், முன்னாள் வீரரான நளின் பிரியந்த 2.21 மீற்றர் உயரத்தையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், 2.15 மீற்றர் உயரத்தை தாவி, முன்னைய போட்டி சாதனையை சமப்படுத்திய இலங்கை இராணுவத்தின் ரொஷான் தன்னிக்க 2 ஆவது இடத்தையும், 2.00 மீற்றர் உயரத்தை தாவிய கேகாலை மெய்வல்லுனர் சங்கத்தின் வி. ரத்னாயக்க 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை நேற்று காலை நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில், கொழும்பு புனித பேதுரு கல்லூரியின், ஹிரூஷ ஏஷான் புதிய போட்டி சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அவர் குறித்த போட்டியில் 7.09 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்தார்.
>> பொதுநலவாய பதக்கம் வென்றவர்களுக்கு 19 மில்லியன் பணப்பரிசு
அத்துடன், 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்து கொண்ட கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் மற்றுமொரு வீரரான ருமேஷ் தரங்க, 55.34 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனை ஒன்றை படைத்தார்.
இந்நிலையில், போட்டிகளின் 2 ஆவது நாளான இன்று (24) ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வட பகுதி வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Results – Day 01 Final results