அஞ்சலோட்ட சாதனைகளுடன் நிறைவடைந்த 2ஆம் நாள்

Sir John Tarbat Junior Athletics Championship 2022

294

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 51ஆவது சேர். ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான நேற்றைய தினம் (29) நான்கு போட்டி சாதனைகளும், ஒரு முந்தைய போட்டி சாதனையும் சமப்படுத்தப்பட்டன.

இதில் நான்கு போட்டி சாதனைகள் அஞ்சலோட்டத்தில் முறியடிக்கப்பட, ஒரு சாதனை ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் சமப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12 வயதின் கீழ் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 25.6 செக்கன்களில் ஓடி முடித்து கண்டி திருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டி. ராஜபக்ஷ முந்தைய போட்டி சாதனையை சமப்படுத்தியிருந்தார்.

இதனிடையே, 12 வயதின் கீழ் ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் மொறட்டுவை புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி அணி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவுசெய்ய 54.5 செக்கன்களை அந்த அணி எடுத்துக்கொண்டது.

இதனிடையே, 13 வயதின் கீழ் மற்றும் 14 வயதின் கீழ் ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணிகள் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தன.

அத்துடன், 15 வயதின் கீழ் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் அம்பகமுவ மத்திய கல்லூரி அணி மாணவிகள் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து. குறித்த போட்டியை நிறைவுசெய்ய 51.6 செக்கன்களை அந்த அணி மாணவிகள் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று நடைபெற்ற போட்டிகளில் எந்தவொரு தமிழ் பேசும் வீரர்களும் பதக்கங்களை வெல்லவில்லை.

இந்த நிலையில், போட்டிகளில் 3ஆவது மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சிகள் இன்று (30) நடைபெறவுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<