இந்திய அணிக்கு எதிரான தொடர் நெருங்கிவரும் நிலையில், குசல் பெரேராவின் தோற்பட்டை உபாதை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி சிந்தித்து வருகின்றது.
கடந்த காலங்களில் அணியில் அதிகமான விக்கெட் காப்பு வீரர்கள் இருந்த போதும், தற்போது வேறுபட்ட காரணங்களால் குறித்த விக்கெட் காப்பாளர்கள் விளையாட முடியாமல் உள்ளது. இந்தநிலையில், இலங்கை அணியில் குசல் பெரேராவுக்கு மாற்று விக்கெட் காப்பாளராக எந்தவொரு வீரரும், தற்போது அணியுடன் கொழும்பில் இல்லை.
தனது கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் சந்திமால் கடிதம்!
நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர், இங்கிலாந்து தொடரின் போது, உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறியுள்ளதால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தினேஷ் சந்திமால் அணிக்காக தெரிவுசெய்யப்படவில்லை.
குசல் பெரேரா முதல் இரண்டு பயிற்சிகளில் பங்கேற்காத நிலையில், குசல் பெரெரா தொடருக்கு தயாராகுவாரா என்பதை இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்தியர்கள் அறிவிக்கவில்லை. இவர் எதிர்வரும் 18ம் திகதி உடற்தகுதி பெற்றால் அணியில் விளையாடுவார். இல்லையென்றால் அணியின் விக்கெட் காப்பாளராக யார் செயற்படுவது?
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் விளையாட தகுதிக்கொண்ட சில விக்கெட் காப்பாளர்கள் இதோ! குறித்த இந்த வீரர்கள் இலங்கை A மற்றும் வளர்ந்துவரும் அணியினருக்காக தம்புள்ளையில் உள்ள உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிப்பெற்று வருகின்றனர்.
மினோத் பானுக
கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் தொடருக்கு செல்வதை முன்னணி வீரர்கள் விரும்பாத நிலையில், மினோத் பானுக விளையாடியிருந்தார். இவர், மிகச்சிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த விக்கெட் காப்பாளர். இலங்கை அணிக்காக அனைத்துவகை போட்டிகளிலும் அறிமுகமாகியிருந்தாலும், 4 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாடும் வல்லமை பொருந்திய இவர், குசல் பெரேராவுக்கான முதல் நிலை மாற்று வீரராக இருப்பார்.
சதீர சமரவிக்ரம
சதீர சமரவிக்ரம கடந்த 12 மாதங்களில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் ஓட்டங்களை குவித்து வருகின்றார். அத்துடன், தம்புள்ளையில் இந்த வாரம் நடைபெற்ற பயிற்சிப்போட்டியிலும் சிறப்பாக ஓட்டங்களை குவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. 2017ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாயிதுடன், குறித்த ஆண்டு சிறப்பாக பிரகாசித்திருந்தார். எனினும், தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்க தவறியதால், வாய்ப்புகளை இழந்துள்ளார். எவ்வாறாயினும், இப்போது சிறந்த பிரகாசிப்புக்களை வெளிப்படுத்தியுள்ள சதீர சமரவிக்ரமவுக்கு வாய்ப்பை பெறமுடியும்.
லஹிரு உதார
லஹிரு உதார வலதுகை முதல் இலக்க துடுப்பாட்ட வீரர். NCC கழகம் கடந்த காலங்களில் மிகச்சிறந்த விக்கெட் காப்பாளர்களை உருவாக்கிய கழகம். அதேபோன்று மிகச்சிறந்த விக்கெட் காப்பாளரான லஹிரு உதார 2019/20 பருவகாலத்தில் 86 என்ற ஓட்ட சராசரியில் 1039 ஓட்டங்களை பெற்றிருந்தார். விக்கெட் காப்பாளராக பிரகாசிக்கக்கூடிய லஹிரு உதார, ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களையும் குவிக்கக்கூடியவர்.
கமில் மிஸார
கமில் மிஸார இந்த பருவகாலத்தில் முதன்முறையாக முதற்தர போட்டிகளில் NCC அணிக்காக களமிறங்கியதுடன், 8 போட்டிகளில் 3 சதங்கள் அடங்கலாக 437 ஓட்டங்களை குவித்துள்ளார். றோயல் கல்லூரியின் முதல் இலக்க துடுப்பாட்ட வீரரான இவர், அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். குறிப்பாக இங்கிலாந்து தொடருக்கான ஆரம்ப கட்ட குழாத்திலும் இவர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிஷான் மதுசங்க
நிஷான் மதுசங்க இலங்கை U19 அணிக்காக விளையாடிய வீரர். 21 வயதான இவர் மிகவும் இயற்கையான துடுப்பாட்ட வலிமையை கொண்டுள்ளதுடன், வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர். றாகம கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடும் இவர், மிகச்சிறந்த விக்கெட் காப்பாளரும் ஆவார். 18 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடிய இவரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை 82 ஆகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…