47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் 3 போட்டிகள் இவ்வாரம் ஆரம்பம்

National Sports Games 2022

228

இந்த ஆண்டுக்கான 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டம், வேகநடை மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய போட்டிகள் இம்மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் கம்பஹாவில் நடைபெறவுள்ளது.

இருபருபாலாருக்கும் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளுக்கு நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் தொடர்ச்சியாக 2ஆவது ஆண்டாக பிரதான அனுசரணை வழங்க முன்வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி கம்பஹா உடுகம்பொல வீதியில் மேம்பாலம் அருகில் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமாகவுள்ளதுடன், 30 விளையாட்டு வீர வீராங்கனைகள் இம்முறை மரதன் ஓட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், சைக்கிளோட்டப் போட்டிகளும் 08ஆம் திகதி காலை 9.40க்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இதில் 250 வீரர்களும், 50 வீராங்கனைகளும் பங்குபற்ற உள்ளனர்.

இதில் 165 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி கம்பஹா அஸ்கிரிய புதிய வீதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளதுடன், பெண்களுக்கான 82.5 கிலோமீட்டர் தூரம் கொண்ட சைக்கிளோட்டப் போட்டிகள் அதே இடத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியானது, டாக்கா மரதன் ஓட்டம் மற்றும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது தவிர, 20 கிலோமீட்டர் தூரம் கொண்ட வேகநடைப் போட்டிகள் ஒக்டோபர் 09ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, இம்முறைப் போட்டியில் பங்குபற்ற 100 வீரர்களும், 40 வீராங்கனைகளும் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், இம்முறை தேசிய விளையாட்டு விழா மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பிடிக்கின்ற வீரர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

இதன்படி, முதலிடத்துக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது இடத்துக்கு 40 ஆயிரம் ரூபாவும், மூன்றாமிடத்துக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. அத்துடன், 4ஆவது இடத்திலிருந்து 10ஆவது இடம் வரை 20 ஆயிரம் ரூபா முதல் 8 ஆயிரம் ரூபா வரை பணப்பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்படும் மரதன் ஓட்டம், சைக்கிளோட்டம் மற்றும் வேகநடைப் போட்டிகள் குறித்து ஊடகங்ளை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (03) காலை விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அமல் எதிரிசூரிய, விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஐ. பி. விஜயரத்ன, நெஸ்லே லங்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் பந்துல எகொடகொட உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், ”இந்தப் போட்டித் தொடருக்கு பூரண அனுசரணை வழங்குகின்ற நெஸ்லே நெஸ்டமோல் நிறுவனத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன், இந்தப் போட்டிகளை தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடத்தாமல் தனித்தனி விளையாட்டுப் போட்டிகளாக நடத்த வேண்டும்.

தேசிய விழாவாக எடுத்துக்கொண்டு தேவையில்லாமல் செலவு செய்வதை விட, அதை ஒரு போட்டித் தொடராக முறையாக நடத்துவது முக்கியம்.

மேலும், அடுத்துவரும் போட்டிகளும் அனுசரணையாளர்களின் பங்களிப்புடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு விளையாட்டுக்கான பொறுப்பை ஏற்குமாறு நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என தெரிவித்தார்.

 >>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<