நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக இம்மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் கதிர்காமத்தில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு விழாவின் மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகள் என்பன காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தடைப்பட்டிருந்தன.
இதுஇவ்வாறிருக்க, இலங்கையில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் குறைவடையத் தொடங்கியதையடுத்து கடந்த ஜுன் மாதம் முதல் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த இலங்கை அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு என்பன அனுமதி வழங்கியிருந்தது.
>> தேசிய விளையாட்டு விழா வேகநடை, சைக்கிளோட்டம், மரதன் போட்டிகள் ஒக்டோபரில்
இதனையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர்களுக்கிடையில் கடந்த மாத முற்பகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கொவிட் – 19 வைரஸ் காரணமாக தடைப்பட்ட தேசிய விளையாட்டு விழாவை மீண்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய போட்டிகள் இம்மாதம் கதிர்காமத்தில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது.
எனினும், தற்போது நாட்டில் மீண்டும் வேகமாக பரவி வருகின்ற கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் போட்டிகளும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க, இவ்வருட இறுதியில் நடைபெறவிருந்த 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சிகளும் பிற்போடப்படுவதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<