இலங்கை மெய்வல்லுனர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இலங்கை கிரிக்கெட்

178

இம்முறை நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு பெரு விழாவில் வருடத்தின் அதிசிறந்த வீரர் மற்றும் அதிசிறந்த வீராங்கனையாக தெரிவாகின்ற வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உதவியினால் அதிசொசுகு கார்கள் இரண்டு பரிசாக வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.   

இதுவரை காலமும் தேசிய விளையாட்டு பெருவிழாவில் அதிசிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்படுகின்ற வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை முதல்தடவையாக கார்களை பரிசாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

தேசிய விளையாட்டு விழாவுக்கான மூன்று போட்டிகள் நாளை ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை ……

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 45ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பதுளை வின்சண்ட் டயஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது

2019ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு பெரு விழாவின் 33 போட்டிகளுக்கான இறுதி கட்டப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகியதுடன், இதில் 27 போட்டி நிகழ்ச்சிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஜூடோ, கால்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஆணழகர் மற்றும் மெய்வல்லுனர் உள்ளிட்ட 7 போட்டிகள் மாத்திரம் பதுளையை அண்மித்த பகுதிகளில் குறித்த நான்கு நாட்களில் நடைபெறவுள்ளன.

இதேநேரம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிறைவு நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 2,706 வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன், போட்டி நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்வதற்கு சுமார் 750 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய விளையாட்டு பெரு விழாவில் 4 சாதனைகளுடன் தங்கம் வென்றார் ஆர்ஷிகா

தேசிய விளையாட்டு பெரு விழா போட்டிகளில் ………

இந்த நிலையில், 45ஆவது தேசிய விளையாட்டு பெரு விழா, 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தம் குறித்தும் விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டங்கள் என்ன என்பது தொடர்பிலும் ஊடகங்களை தெளிவுபடுத்து விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (16) மாலை கொழும்பில் உள்ள இலங்கை அபிவிருந்தி நிருவாக மன்றத்தில் இடம்பெற்றது.  

இதில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

இதனிடையே இம்முறை தேசிய விளையாட்டு பெரு விழா தொடர்பில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல,

”நாங்கள் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் வீரர்களுக்கான பரிசுகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளோம். இதில், குழுநிலைப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அணியில் இடம்பிடித்த வீரருக்கு 6,000 ரூபாவும், 2ஆவது இடத்துக்கு 4,000 ஆயிரம் ரூபாவும், 3ஆவது இடத்துக்கு 2,000 ரூபாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதேநேரம், இம்முறை தேசிய விளையாட்டு பெரு விழாவில் நாங்கள் முக்கிய விடயமொன்றை செய்தோம். இதில் தேசிய சாதனை முறியடிக்கப்பட்டால் ஒரு இலட்சம் ரூபாவும், போட்டிச் சாதனை முறியடிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரூபா பணமும் பரிசாக வழங்கப்படும்.  

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் முயற்சியினால் இம்முறை தேசிய விளையாட்டு பெரு விழாவில் அதிசிறந்த வீரர்களாக தெரிவாகின்றவர்களுக்கு அதிசொகுசு கார்கள் இரண்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அதிசிறந்த வீரருக்கு மோட்டார் சைக்கிளா அல்லது கார் வண்டியா பரிசாகக் கொடுக்க வேண்டும் என்ற கலந்துரையாடல் எம் மத்தியில் இருந்தது. ஆனால் இதற்கான அனுசரணையாளர்கள் எமக்கு கிடைக்கவில்லை. இறுதியில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த கார்களை வழங்க முன்வந்தது.   

இதுஇவ்வாறிருக்க இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்ற அனைத்து வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான விசேடப் பரிசுப் பொதியொன்று வழங்கப்படவுள்ளது. அதில் டீ. சேர்ட், விளையாட்டு காற்சட்டை, உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

பளுதூக்கலில் புதிய வரலாறு படைத்தார் கிழக்கு வீராங்கனை கிரிஜா

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை ………

இதுவரை நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளின் முடிவில் 72 தங்கப் பதக்கங்களுடன் மேல் மாகாணம் முதலிடத்திலும், 22 தங்கங்களுடன் மத்திய மாகாணம் இரண்டாவது இடத்திலும், 20 தங்கங்களுடன் வடமேல் மாகாணம் மூன்றாவது இடத்திலும் உள்ளன

இதில் 4 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்திலும், ஒரேயொரு தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற வடக்க மாகாணம் கடைசி இடத்திலும் உள்ளன

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான கடற்கரை கபடி, பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டம், ஆண்களுக்கான கராத்தே தோ மற்றும் ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டது

வட மாகாணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் மாத்திரம் ஒரேயொரூ தங்கப் பதக்கத்தினை இதுவரை வென்றுள்ளது.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை பணிப்பாளர் தம்மிக முத்துகல, அண்மையில் வட மாகாணத்துக்கு அனுப்பிவைத்த 5 பயிற்சியாளர்களை திருப்பி அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.  

Photos: Media Conference – 45th National Sports Festival & SAG 2019

”நாங்கள் அதிகளவான விளையாட்டுப் பயிற்சியாளர்களை இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைத்தோம். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் 5 பேர் அங்கு சென்று பணியாற்றவில்லை. எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீளப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என தெரிவித்தார்.  

எதுஎவ்வாறாயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சினால் சகல ஒத்துழைப்புகளும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<