விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 43ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா இம்மாதம் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சமாதானம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் இலங்கைக்கு முதல் பதக்கம்
துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஸ்கபாத் நகரில் இடம்பெற்று வருகின்ற ஐந்தாவது ஆசிய…
கடந்த வருடம் யாழ்.துரையப்பா மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வின்போது, இவ்வருடத்துக்கான (2017) தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட 33 விளையாட்டுக்களை சப்கரமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் நடாத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவிருந்த இரத்தினபுரி நகர சபை மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் சுவட்டு மைதானப் பணிகள் பூர்த்தியாகாத நிலையில், குறித்த போட்டிகளை தென் மாகாணத்துக்கு வழங்கவும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை, கொடவில மைதானத்தில் மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி 5ஆவது தடவையாக தென் மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழா 3ஆவது தடவையாக மாத்தறையில் நடைபெறவுள்ளது. முன்னதாக 1975ஆம் ஆண்டு காலியிலும், 1979 மற்றும் 2002இல் மாத்தறையிலும் நடைபெற்றதுடன், இறுதியாக 2006ஆம் ஆண்டு பெலியத்தையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவின் 29 போட்டிகளுக்கான இறுதிக் கட்டப் போட்டிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இதில் பெரும்பாலான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கால்பந்து, ஆணழகன் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் இவ்வாரம் நடைபெறுகின்றன.
இதன்படி, 33 விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான இறுதிக்கட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதற்தடவையாக 8 விளையாட்டுப் போட்டிகள் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதுடன், இறுதி நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.
தெற்காசிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற தென் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நீளம் பாய்தல் வீரரான பீ.கே சுஜித் ரோஹித மற்றும் 800 மீற்றர் மற்றும் 1,500 மீற்றர் ஓட்டப் பந்தயங்களின் முன்னாள் தேசிய சாதனையாளருமான தம்மிகா மெனிகே ஆகியோருக்கு இம்முறை தேசிய விளையாட்டு விழாவிற்கான தீபத்தை ஏற்றும் அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக சுமார் 1000இற்கும் குறைவான வீர, வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து 120 மெய்வல்லுனர் வீரர்கள் பங்குபற்றவுள்ளதுடன், அவ்வணியின் தலைவராக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த வீரராகத் தெரிவான எம்.ஐ.எம் மிப்ரான் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வட மாகாணத்தில் இருந்து 75 மெய்வல்லுனர் வீரர்கள் பங்குபற்றவுள்ளதுடன், அவ்வணியின் தலைவராக கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்த அனீதா ஜெகதீஸ்வரன் செயற்படவுள்ளார்.
எனவே, நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளில் தகுதிச்சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி என 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. வருடத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதுகள் மற்றும் சம்பியன் அணிக்கான விருதுகள் இறுதிநாள் நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்துறை அமைச்சின் 50ஆவது ஆண்டு நிறைவு கண்காட்சி
இலங்கையின் விளையாட்டு நிர்வாகம் மற்றும் விளையாட்டுத்துறை சம்பந்தமான அனைத்து விடயங்களையும் நிர்வகிக்கும் வகையில் 1967ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது நாட்டின் முதல் விளையாட்டுத்துறை அமைச்சராக வி.ஏ சுகதாஸ நியமனம் பெற்றார்.
எனவே அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் முக்கிய அம்சமாக விளையாட்டுத்துறை அமைச்சின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 43ஆவது தேசிய விளையாட்டு விழாவை ஒன்றிணைத்ததாக நாளை முதல் மாத்தறை கொடவில மைதானத்தில் விசேட கண்காட்சியொன்றை நடத்துவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 61 விளையாட்டு சங்கங்கள் மற்றும் 9 மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு அமைச்சுக்களின் பங்குபற்றலுடன் இந்நாட்டின் விளையாட்டுத்துறையின் சாதனைகள், அடைவுமட்டங்கள், கடந்த கால வெற்றிகளை பறைசாற்றும் வகையில் கண்காட்சி கூடங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு கல்வி, கலை, கலசார மற்றும் களியாட்ட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளதாக கண்காட்சி தொடர்புபடுத்த அதிகாரி கே.எம் ஹேமன்த பண்டார எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.
இக்கண்காட்சியை தொடர்ந்து 3 நாட்களுக்கு மக்கள் பார்வைக்காக காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைப்பதற்கும் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.