முதன்முறையாக யாழ் மண்ணில் இடம்பெற்ற இலங்கையின் முதற்தர விளையாட்டு நிகழ்வான 42ஆவது தேசிய விளையாட்டு விழா, நேற்றைய தினம் பிரதம விருந்தினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இனிதே நிறைவடைந்தது.
மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மொத்தமாக 254 பதக்கங்களை (113 தங்கம், 74 வெள்ளி, 67 வெண்கலம்) சுவீகரித்த மேல் மாகாண அணி ஜனாதிபதி சவால் கிண்ணத்தை இம்முறையும் தக்கவைத்துக் கொண்டது. 105 பதக்கங்களை (33 தங்கம், 29 வெள்ளி, 43 வெண்கலம்) வென்ற தென் மாகாணம் இரண்டாம் இடத்தையும், 107 பதக்கங்களை (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்) வென்ற மத்திய மாகாணம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
விழாவின் இறுதி நாளான நேற்று இரண்டு தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன. பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் தென் மாகாணத்தை சேர்ந்த மனோஜி அமரசிங்க 45.85 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை நிலை நாட்டினார். இப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஊவா மாகாணத்தை சேர்ந்த மதுவந்தியும் முன்னைய சாதனையை விட அதிகபடியான தூரமான 44.82 மீட்டர் எறிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மேல் மாகாணத்தின் வருண லக்ஷான் 78.52 மீட்டர் எறிந்து புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார். இப்போட்டி புற்தரையில் இடம்பெற்றதுடன் தடகளம் சறுக்கும் தன்மையுடன் காணப்பட்டதால், லக்ஷான் குறித்த எல்லைகோட்டை விட பின்னாலிருந்தே ஈட்டியை எறிந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை போட்டி விழாவில் கயிறிழுத்தல் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஆண், பெண் இருபாலாருக்கான போட்டிகளிலும் மேல் மாகாணம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. அவர்கள் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தையும், பெண்களுக்கான இறுதிப் போட்டியில் வட மாகாணத்தையும் தோற்கடித்தனர்.
1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசிய விளையிட்டு விழாவொன்றில் 04 தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனிதா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தனது முன்னைய சாதனையை தகர்த்து 3.41 மீட்டர் உயரம் பாய்ந்து புதிய சாதனையை நிலை நாட்டினார்.
பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற தாரிகா பெர்னாண்டோ 15.25 மீட்டர் தூரம் வீசி புதிய சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியிலும் புதிய தேசிய சாதனை நிலை நாட்டப்பட்டது. 5.10 மீட்டர் உயரம் பாய்ந்த இஷார சந்தருவன் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் 24 வருடங்களுக்கு முன் 1992ஆம் ஆண்டு பார்சிலோனாவில் தம்மிகா மெனிக்கே நிலைநாட்டிய சாதனையை முறியடித்த நிமாலி லியனாராச்சி 2:03.5 வினாடிகளில் ஓடி புதிய சாதனை படைத்தார். மண்ணுடன் கூடிய புற்றரையில் இவர் இச்சாதனையை நிலை நாட்டியது சிறப்பம்சமாகும்.