இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற தெற்காசியாவின் அதிவேக வீரரும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவருவமான யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான காலப் பெறுமதி 10 செக்கன்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் யுபுனின் சிறந்த காலப் பெறுமதி 9.96 செக்கன்கள் ஆகும், இதனால் அவருக்கு இம்முறை ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சுமார் ஓராண்டு காலம் காயம் காரணமாக மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து விலகி இருந்த யுபுன், டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் இருந்து தனது வழமையான திறமைக்கு திரும்புவார் என நம்பப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இத்தாலியில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்ற யுபுன், அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற Florence Sprint Festival 2024 மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்ததுடன், இந்த ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்தார். எனவே அவர் டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்க இத்தாலியில் இருந்து நேரடியாக வந்து இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன் அபேகோன்
- கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் இலங்கை சாதனை; அசான், வக்ஷானுக்கு தங்கம்
- மெய்வல்லுனர் தகுதிகாணில் பிரகாசித்த வக்ஷான், அரவிந்தன், மிதுன்ராஜ்
இதனிடையே, இலங்கையின் இளம் மெய்வல்லுனர் வீராங்கனைகளில் ஒருவரும், ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்றவருமான தருஷி கருணாரத்ன 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
தருஷியைத் தவிர, கயந்திகா அபேரத்னவும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ள அதேவேளை, நதிஷா ராமநாயக்க பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
டுபாய் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை வீரர்களின் பயிற்சியாளர்களாக சுசந்த பெர்னாண்டோ மற்றும் டி.எம்.ஜி .துஷார ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நான்கு விளையாட்டு வீரர்களுக்கும், இரண்டு பயிற்சியாளர்களுக்கும் நிதி உதவி வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரானது உலக மெய்வல்லுனர் சங்கத்தின் C பிரிவு போட்டியாகும். இதன் பின்னர் இலங்கை வீரர்களுக்கு ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுக்கொள்ள C மற்றும் B பிரிவுகளில் தலா இரண்டு போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்காக கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<