புகலிடம் கோரிய ஆப்கான் கிரிக்கெட் அணி உறுப்பினர்கள்??

442

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்றிருந்த ஆப்கான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினுடைய நான்கு உறுப்பினர்கள், தாயகத்திற்கு மீளத் திரும்பவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>அவுஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

ஒரு வீரர் அடங்கலாக மொத்தம் நான்கு உறுப்பினர்கள் ஆப்கானுக்கு திரும்பாத நிலையில், இந்த நால்வரும் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் தரித்து ஐக்கிய இராச்சியத்தில் புகலிடம் தேடுவதாக ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இதேநேரம் இங்கிலாந்தில் தரித்துள்ள ஆப்கான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரரினையும், ஏனைய உறுப்பினர்களையும் தங்களது முடிவுகளை மீள பரிசீலித்து நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாக, ஆப்கான் இளையோர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் றயீஸ் அஹ்மட்சாய் Cricinfo செய்திச்சேவையிடம் குறிப்பிட்டிருக்கின்றார். எனினும், அஹ்மட்சாயின் வேண்டுகோளிற்கு புகலிடம் கோரியுள்ளவர்கள் பதில் எதுவும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கான் கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில், வேறு நாடுகளில் புகலிடம் கோருவது முன்னரும் நடைபெற்றிருக்கின்றது. இதற்கு முன்னர், கடந்த 2009ஆம் ஆண்டு இளையோர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக டொரன்டோ நகருக்குச் சென்றிருந்த சில ஆப்கான் வீரர்கள் கனடாவில் புகலிடம் கோரியிருந்ததோடு, அதன் பின்னர் புகலிடம் கோரிய இரண்டு ஆப்கான் வீரர்கள் கனடாவின் தேசிய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>ஐ.சி.சி. இன் மாதத்திற்குரிய சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்குரிய பரிந்துரையில் சமரி அத்தபத்து

எனினும், கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்ட தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் ஆப்கான் கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த வீரர்கள், வேறு நாடுகளில் புகலிடம் தேடுவது இதுவே முதல்தடவையாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<