மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி

700

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை A அணி 2-1 என கைப்பற்றியது.

ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் ஷெஹான் ஜயசூரிய மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகிய இருவரின் அதிரடி பந்துவீச்சின் மூலம் இரண்டு நாட்களுக்குள் போட்டி முடிவுக்கு வந்தது.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் நாணய சுழற்சி கூட போடப்படாத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் A அணி முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு சுருண்டது. எனினும் மத்திய வரிசை வீரர் சுனில் அம்ப்ரிஸ் மாத்திரம் (101) சதம் பெற்றார். ஏனைய எந்த வீரரும் 20 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை.

23 ஓவர்கள் வீசிய மலிந்த புஷ்பகுமார 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமார மற்றும் ஷெஹான் ஜயசூரிய தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை A அணி மூன்றாவது நாளிலும் அந்த இன்னிங்சைத் தொடர்ந்தது. இதன்மூலம் இலங்கை A அணி 76.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

லாஹூரில் இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு

அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா தொடரில் மூன்றாவது அரைச் சதத்தை எட்டினார். 97 பந்துகளுக்கு முகங்கொடுத்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 64 ஓட்டங்களை பெற்றார். ரொஷேன் சில்வாவும் (52) அரைச்சதம் எட்டினார்.

இதன்படி இலங்கை A அணி முதல் இன்னிங்சில் 92 ஓட்டங்களால் முன்னிலை பெற்றபோதே ஜமைக்க நேரப்படி நேற்று சனிக்கிழமை மேற்கிந்திய தீவுகள் A அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

எனினும் ஜயசூரிய மற்றும் புஷ்பகுமார இரு திசைகளிலும் பந்துவீச மேற்கிந்திய தீவுகள் அணி தமது விக்கெட்டுகளை காத்துக் கொள்ளத் தடுமாறியது.

ஜயசூரிய வீசிய பந்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொன்ட்சின் ஹொட்ஜ் ஓட்டமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மறுமுனையில் ஆடிய தொடக்க வீரரான ஜோன் கெம்பல், ஜயசூரியவின் பந்தில் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் ஆடுத்து வந்த அணித்தலைவர் ஷமர் ப்ரூக்ஸ் நிதானமாக ஆடி அரைச்சதம் ஒன்றை எட்டியபோதும், மறுமுனையில் இருந்த துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகள் இடைவிடாமல் பறிபோனது. 90 பந்துகளுக்கு முகங்கொடுத்த ப்ரூக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 92 ஓட்டங்களை 7 விக்கெட்டுகளை இழந்து பெற்றபோதும் போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்கு தேவையான ஓட்டங்களைப் பெறத் தவறியது.

இதன்படி 37.3 ஓவர்களுக்கு முகங்கொடுத்த மேற்கிந்திய தீவுகள் A அணி 118 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்போது இலங்கை A அணி சார்பில் ஷெஹான் ஜயசூரிய 17 ஓவர்கள் பந்துவீசி 60 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மலிந்த புஷ்பகுமார 11.3 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் இலங்கை A அணிக்கு வெறும் 27 ஓட்டங்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே இலங்கை அணி 5.5 ஓவர்களுக்கு முகங்கொடுத்து விக்கெட் இழப்பின்றி அந்த இலக்கை எட்டியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரொன் சந்திரகுப்தா 3 ஓட்டங்களையும். நிபுன் கருணாநாயக்க 17 ஓட்டங்களையும் பெற்று இலங்கை A அணியை வெற்றிபெறச் செய்தனர்.

இந்தப் போட்டியில் 101 ஓட்டங்களுக்கு மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷெஹான் ஜயசூரிய போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதில் புஷ்பகுமாரவும் சிறப்பாக பந்துவீசி 80 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

15 வயதுக்குட்பட்ட மாகாண கிரிக்கெட் சம்பியனாக மேல்மாகாண மத்திய பிராந்தியம்

அதேபோன்று புஷ்பகுமார தொடரின் மூன்று போட்டிகளிலும் மொத்தமாக 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் அண்மையில் நடந்த இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலேயே இலங்கை அணிக்காக தனது கன்னிப் போட்டியில் ஆடினார்.

தவிர இலங்கை அணிக்காக 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 T20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷெஹான் ஜயசூரிய இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A அணி அடுத்து, மேற்கிந்திய தீவுகள் A அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஜமைக்காவின், சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறும்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A அணி (முதல் இன்னிங்ஸ்) – 181 (60.3) – சுனில் அம்ப்ரிஸ் 101, மலிந்த புஷ்குமார 67/4, லஹிரு குமார 35/2, ஷெஹான் ஜயசூரிய 41/2  

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 273/9d (76.2) – தனஞ்சய டி சில்வா 64, ரொஷேன் சில்வா 52*, ஷெஹான் ஜயசூரிய 36, ரெய்னாட் லெவரிட்ஜ் 25/2, கொயேன் ஜோசப் 43/2, ஒஷான் தோமஸ் 54/2

மேற்கிந்திய தீவுகள் A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 118 (37.3) – ஷமர் ப்ரூக்ஸ் 52, ஷெஹான் ஜயசூரிய 60/6, மலிந்த புஷ்பகுமார 19/4

இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 27/0 (5.5) – ரொன் சந்திரகுப்தா 3*, நிபுன் கருணாநாயக்க 17*

முடிவு: இலங்கை A அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி