அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள்

276
Junior Athletic

தெற்காசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் அடுத்த வருடம் மே மாதம் இலங்கையில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருந்த குறித்த போட்டித் தொடர் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டது. எனினும் முன்னதாக குறித்த போட்டித் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், இலங்கையில் போதியளவு மைதான வசதிகள் இல்லாத காரணத்தால் இந்தியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த மாதம் தியகமவில் ஆரம்பமாகும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற வருடத்தின் …

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ மேலும் கருத்து வெளியிடுகையில், ”தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரை அடுத்த வருடம் மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கையில் நடாத்துவதற்கு நாம் சம்மதம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் நாம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதுடன், போட்டிகளுக்கான தொழில்நுட்ப அதிகாரிகளை வழங்குவது தவிர ஏனைய அனைத்து செலவுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்கும்படியும் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” எனக் கூறினார் .

இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை கொழும்பில் அல்லது தியகமவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதிலிருந்து 25 பேர் கொண்ட தேசிய குழாமை அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எனவே சுகததாஸ மைதானத்தின் செயற்கை ஓடுபாதையின் திருத்த வேலைகள்  உரிய காலப்பகுதியில் நிறைவு செய்யப்பட்டால், 2018 ஆம் ஆண்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மெய்வல்லுனர் சம்மேளனம் முன்னெடுத்துள்ளது.

இதனையடுத்து 2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை ஜப்பானில் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளும், ஜுலை 10 முதல் 15ஆம் திகதி வரை பின்லாந்தில் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமிற்கு வீரர்களை தெரிவு செய்வது குறித்து இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த பாலித பெர்னாந்து, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 7 பதக்கங்களை வெல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமிற்கு ஏற்கனவே 3 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவருக்கு வெளிநாட்டு பயிற்சியொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனை விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம். இதில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் கடந்த காலங்களில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற குருநாகல் மலியதேவ கல்லூரியைச் சேர்ந்த பி.எம் கொடிகாரவுக்கும், ஹிங்குராங்கொட மத்திய கல்லூரியைச் சேர்ந்த அநுர தர்ஷனவுக்கும், பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.08 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்துள்ள அம்பலங்கொட தர்மாசோக கல்லூரியைச் சேர்ந்த கே.கே.ஆர்.எம் அபேரத்ன ஆகிய வீராங்கனைக்கும் இவ்வாறு விசேட வெளிநாட்டு பயிற்சியொன்றைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவையனைத்துக்கும் மத்தியில் சுகததாஸ மைதானத்தின் செயற்கை ஓடுபாதையின் நிர்மானப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடைந்தால் அடுத்த வருடத்திலிருந்து சர்வதேசப் போட்டிகளை இலங்கையில் நடத்துவது குறித்தும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அவதானம் செலுத்தியுள்ளது.