மியன்மாரில் முடிவுற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் 7 மற்றும் 8 ஆவது இடங்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிடம் 3–0 என கடும் போராட்டத்திற்கு பின் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் இம்முறை ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 ஆவது இடத்தை பெற்றதோடு இலங்கை அணி 8 ஆவது இடத்துடன் ஆறுதல் அடைந்தது.
இன்று (11) நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில் பலம் மிகக் அவுஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க இலங்கையால் முடிந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் 21–19 என்ற புள்ளிகளால் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருந்தபோதும் தொடர்ந்து 24–24 என சமநிலைக்கு முன்னேற இலங்கையால் முடிந்தது.
24 ஆவது புள்ளியை பெற்ற பின் பந்தை வழங்குவதில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவுஸ்திரேலிய அணி 25–24 புள்ளிகளால் முன்னிலை பெற்றதோடு பந்தை உயர்த்திக் கொடுப்பதில் ஏற்பட்ட தவறால் அந்த சுற்றில் 26–24 என வெற்றி பெற அவுஸ்திரேலியாவால் முடிந்தது.
இரண்டாவது சுற்றில் இலங்கை அணி முதல் சுற்று போன்று வலுவான ஆரம்பம் ஒன்றை பெறத் தவறியதோடு அவுஸ்திரேலிய அணி 10 புள்ளிகளை பெறும்போது இலங்கை அணி 03 புள்ளிகளையே பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் 11–06 என இடைவெளியை குறைத்துக் கொள்ள இலங்கை இளம் வீரர்களால் முடிந்தது. இலங்கை அணியின் பலவீனங்களின் உச்ச பலனை பெற்ற அவுஸ்திரேலிய அணி இரண்டாவது சுற்றை 25–16 என வென்றது.
முதல் இரு சுற்றுகளையும் 2–0 என கைப்பற்றி வெற்றியை நெருங்கிய நிலையில் மூன்றாவது சுற்றை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப நிமிடங்களிலேயே கடும் சவால் கொடுப்பதற்கு இலங்கை அணியால் முடிந்தது.
பந்தை வழங்குவதில் இலங்கை அணி காண்பித்த பலவீனத்தில் உச்ச பலனை பெற்ற அவுஸ்திரேலிய அணி 17–11 என முன்னிலை பெற்றது. இலங்கை அணியின் ஆட்ட பாணியை நன்றாக ஆய்வு செய்து ஆடிய அவுஸ்திரேலிய வீரர்கள் எதிரணிக்கு புள்ளிகளை விட்டுக் கொடுப்பதை தவிர்த்து வந்ததை காணமுடிந்தது.
இலங்கை அணி இந்த சுற்றிலும் 18 புள்ளிகளை பெற்ற நிலையில் அவுஸ்திரேலியா 25 புள்ளிகளை வென்று அந்த சுற்றையும் தனதாக்கிக் கொண்டது.