கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளின் நான்காவது நாளான இன்று (02) நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீபிகா புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதேநேரம், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவனான எஸ். மிதுன்ராஜ் முந்தைய போட்டிச் சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற கமல் ராஜ் மற்றும் ஜெனுஷன்
அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான….
இதன்படி, இன்றைய நான்காம் நாள் முடிவில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
இது இவ்வாறிருக்க, 18 மற்றும் 20 ஆகிய இரு பாலாருக்குமான வயதுப் பிரிவுகளில் நடத்தப்பட்ட கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் 3 போட்டிச் சாதனைகளுடன் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதில் 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர்களான ஏ. புவிதரன் மற்றும் என். டக்சிதா ஆகிய இருவரும் புதிய போட்டிச் சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வெற்றி கொள்ள, அளவெட்டி அருணோதயா கல்லூரியின் எஸ். திசாந்த், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்.
தீபிகா, தனுசங்கவி அபாரம்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீராங்கனை சி. தீபிகா புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டி அந்தக் கல்லூரிக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார்.
நீர்கொழும்பு நியூஸ்டெர்ட் பெண்கள் பாடசாலையின் அய்ஸ்வரா விக்ரமசிங்கவினால் 2015 ஆம் ஆண்டு நிலை நாட்டப்பட்ட 3.12 மீற்றர் சாதனையை சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு தீபிகா முறியடித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் முதல் தடவையாகக் களமிறங்கிய தீபிகா, 2.80 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதே போட்டியில் பங்குகொண்ட யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி, 2.80 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியிருந்த தனுசங்கவி, 2.90 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், நீர்கொழும்பு நியூஸ்டெர்ட் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த தமாஷா விக்ரமசிங்க 2.90 மீற்றர் உயரம் தாவி, வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
மிதுன்ராஜுக்கு 2 ஆவது பதக்கம்
மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 45.88 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அத்துடன், துமமலதெனிய புதிய ரீடா கல்லூரியின் மலிந்த் வெத்தசிங்கவினால் 2017 ஆம் ஆண்டு நிலைநாட்டிய 42.72 மீற்றர் என்ற சாதனையை மிதுன்ராஜ் இப்போட்டியில் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேநேரம், போட்டிகளின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதலில் 15.95 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தினை மிதுன்ராஜ் வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த போட்டியில் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவர்களான ருமேஷ் தரங்க 50.30 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், அகலங்க விஜேசூரிய 41.55 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
யாழ். ஹார்ட்லி மாணவன் மிதுன்ராஜ் குண்டு எறிதலில் புதிய சாதனை
35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு…
சுபிஜனுக்கு வெண்கலம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் யாழ். வேலணை மத்திய கல்லூரியைச் சேர்ந் எஸ். சுபிஜன் 1.95 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கம் வென்றார். இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் வேலணை மத்திய கல்லூரி பெற்றுக்கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
நேற்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அதே கல்லூரியைச் சேர்ந்த ச. பாணுசன், 51.12 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், சுபிஜன் பங்குகொண்ட உயரம் பாய்தல் போட்டியில் ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரியைச் சேர்ந்த இனுர கவிஷான் (2.07 மீற்றர்) வர்ணச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த சன்ஜு தாருக்க (1.95 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<