கோலூன்றிப் பாய்தலில் அருணோதயாவின் திஷாந்துக்கு தங்கம்: மகாஜனாவின் சுவர்ணாவுக்கு முதல் பதக்கம்

229

35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இன்று (01) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இதில் இன்று காலை நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்ததுடன், பெண்களுக்கான உயரம் பாய்தலில் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைக்கப் பெற்றன.

குண்டெறிதலில் கிழக்குக்கு பெருமையை தேடிக் கொடுத்த அய்மன்: ரிஹானுக்கு வெள்ளிப் பதக்கம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 35ஆவது…

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த எஸ். திஷாந்த், 4.30 மீற்றர் உயரத்தைத் தாவி வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இவர் கடந்த வருடமும் இதே போட்டியில் பங்குகொண்டு 4.35 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

ஆரம்பத்தில் நீளம் பாய்தல் மற்றும் சட்டவேலி ஓட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த திஷாந்த், அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்றுவிப்பாளர் பிரதீபனின் வழிகாட்டலுடன் கடந்த வருடம் முதல் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான வி. ருஷான் மற்றும் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஏ. பவிதரன் ஆகியோர் 4.10 மீற்றர் உயரங்களைத் தாவி சம இடங்களைப் பெற்று வர்ணச் சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான ஏ. பவிதரன், இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் களமிறங்கி 4.40 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்ததுடன், இறுதியாக கடந்த வாரம் நிறைவுக்கு வந்த தேசிய விளையாட்டு விழாவில் 4 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டார். 

இது இவ்வாறிருக்க, கடந்த வருடம் அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் வெள்ளிப் பதக்கம் வென்ற தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின்  எஸ். ஜம்சனுக்கு (4.00 மீற்றர்) வர்ணச் சாதனையுடன் ஐந்தாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

சுவர்ணாவுக்கு முதல் பதக்கம்

இன்று காலை நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுவர்ணா வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் இவர் 1.49 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்தார்.

கடந்த வருடம் முதல் தடவையாக அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் களமிறங்கிய சுவர்ணா பெற்றுக்கொண்ட முதலாவது தேசிய மட்டப் பதக்கமும் இதுவாகும். 

இதேநேரம், குறித்த போட்டியில் இப்பாகமுவ கோனிகொட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்தத கெத்மினி குமாரி ஹேரன் 1.53 மீற்றர் உயரம் தாவி கடந்த வருடம் வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த நளீமா லஹிருனி டி சில்வா நிகழ்த்திய போட்டிச் சாதனையை சமப்படுத்தி தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

அத்துடன், பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தின் ரொமிந்தி கீகியனகே 1.49 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தினையும் சுவீகரித்தார். 

பாணுசனுக்கு வெண்கலம்

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் யாழ். வேலணை மத்திய கல்லூரியைச் சேர்ந்த ச. பாணுசன், 51.12 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

குறித்த போட்டியில் வென்னப்புவ கொன்சல் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த திலீப் குமார (61.43 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த டில்ஷான் பரணான்டோ (59.74 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். 

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<