3000 மீட்டர் தடைதாண்டலில் நிலானியின் அதிசிறந்த நேரப் பெறுமதி

212

நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான நிலானி ரத்நாயக்க தியகம மகிந்த ராஜபக்ஷ அரங்கில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தனது இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுமதியை பதிவு செய்தார்.

அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3000 மீட்டர் தடைதாண்டல் மற்றும் நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சிகளுக்கான விசேட தகுதிகாண் போட்டிகள் நேற்று (19) தியகம மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்நாயக்க, போட்டியை 9 நிமிடங்கள் 46.39 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.

3000 மீட்டர் பெண்களுக்கான தடைதாண்டல் ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை ஒருவர் பதிவு செய்த இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுமதி இதுவாகும்,

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்னாயக்க, போட்டியை 9 நிமிடங்கள் 40.24 செக்கன்களில் நிறைவு செய்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்திருந்தார்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற விசேட தகுதிகாண் போட்டியில் நிலானி ரத்நாயக்க வெளிப்படுத்திய திறமை காரணமாக உலக தரவரிசையில் மேலும் ஒரு புள்ளியை பெற்றுக்கொண்டுள்ளார். இதனால் தரவரிசையில் அவரது தற்போதைய நிலை (38) 1184 முதல் 1185 வரை மாறாமல் உள்ளது.

இதேவேளை, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான கயந்திகா அபேரட்ன, நேற்று நடைபெற்ற விசேட தகுதிகாண் போட்டிளை 2 நிமிடங்கள் 03.38 செக்கன்களில் நிறைவு செய்தார். இதன்மூலம், உலக தரவரிசையில் மேலும் நான்கு புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், 1156 முதல் 1560 வரை புள்ளிகளை அதிகரித்துக் கொண்டுள்ளார். ஆனால் தரவரிசையில் முன்னோக்கிச் செல்ல அவருக்கு அது போதுமானதாக இல்லை.

இதுஇவ்வாறிருக்க, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மிகவும் நெருங்கியுள்ள பெண்களுக்கான நீளம் பாய்தல் தேசிய சம்பியனனான சாரங்கி சில்லாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்று நடைபெற்ற விசேட தகுதிகாண் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போனது.

இதனிடையே, இந்தப் விசேட போட்டித் தொடரானது அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மிகவும் நெருங்கியுள்ள வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் அதிவேக வீரர் யுபுன் அபேகோன், நிலானி ரத்நாயக்க, சாரங்கி டி சில்வா மற்றும் கயந்திகா அபேரட்ன ஆகியோர் கோட்டா (Quota) அடிப்படையில் இந்த ஆண்டு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெறும் தருவாயில் உள்ள போதிலும், குறித்த நால்வரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு நேரடியாக தகுதிபெறவில்லை.

எவ்வாறாயினும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கு கோட்டா அடிப்படையில் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பு உள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<