இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் சர்வதேச போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த முடிவின்மூலம், இலங்கை அணிக்கு இந்த தொடரை இழப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
ஜமைக்காவின் கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று (03) இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டியில், தொடக்கம் முதலே மழை குறுக்கிட்டது. இதனால் நாணய சுழற்சியை பார்ப்பதிலும் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.
மேற்கிந்திய தீவுகளை போராடி வீழ்த்தியது இலங்கை A அணி
மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான…
இதே சபீனா பார்க் மைதானத்தில் கடந்த புதன்கிழமை (01) நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் தனன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை A அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை A அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டி கைவிடப்பட்டிருப்பதால் இந்த தொடரில் தோல்வியை சந்திக்கும் நெருக்கடியில் இருந்து இலங்கை A அணி தப்பித்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி நாளை (05) ஜமைக்காவின் ட்ரலோனி அரங்கில் நடைபெறவுள்ளது. பகல் போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி அன்றைய தினம் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். இதில் இலங்கை அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முடியும். தோல்வியை சந்தித்தால் தொடர் 1-1 என சமநிலை பெறும்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A அணி ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.