இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களை வெற்றி கொண்டுள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று (06) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.
அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட்…
இந்த நிலையில், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இவ்விரு அணிகளுக்குமிடையில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி, இரு அணி வீரர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்கள் உள்ளிட்டோருக்கு தங்குவதற்கான ஹோட்டல் வசதிகள் இல்லாததால் கொழும்புக்கு இடம் மாற்றப்படலாம் என பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், நாட்டின் முக்கியத்துவத்தையும், போட்டித் தொடரின் நம்பகத்தன்மையையும் உறுதி செய்யும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, குறித்த ஹோட்டல் நிர்வாகத்தினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை அடுத்து வீரர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களுக்கான தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஹோட்டல்களில் ஏற்கனவே முன்பதிவுகளை மேற்கொண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், குறித்த ஹோட்டல் நிர்வாகமும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.