சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 26 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டி-20 நொக்-அவுட் தொடரின் இறுதிப் போட்டியில் மாஸ் யுனிச்செல்லா அணி, ஜோன் கீல்ஸ் அணியை ஒரு விக்கெட்டினால் வீழ்த்தி இவ்வருடத்துக்கான சம்பியனாகத் தெரிவாகியது.
மொத்தமாக 10 வர்த்தக நிறுவனங்களின் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றிய இந்த நொக்-அவுட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு MCA மைதானத்தில் இன்று (03) நடைபெற்றது.
வர்த்தக டி-20 தொடரின் அரையிறுதியில் சம்பத், டீஜே, ஜோன் கீல்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ அணிகள்
மாஸ் யுச்னிசெல்லா அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷானும், ஜோன் கீல்ஸ் அணியின் தலைவராக இலங்கை A அணி வீரரான பானுக ராஜபக்ஷவும் செயற்பட்டனர். அத்துடன், இவ்விரண்டு அணிகளிலும் தேசிய அணியில் விளையாடிய வீரர்களும் இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இப்போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் (01) நடைறெவிருந்த போதிலும், கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் போட்டிகளை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக இறுதிப் போட்டிக்கான அணிகள், போல் – அவுட் (Ball out) முறையில் தெரிவுசெய்யப்பட்டது.
போட்டி விதிமுறைகளின் பிரகாரம் தனியொரு விக்கெட்டினை நோக்கி பந்தை வீசுகின்ற இந்த போல்ட் – அவுட் முறையில் டீஜே லங்கா அணியை 3 – 2 என ஜோன் கீல்ஸ் அணியும், சம்பத் வங்கி அணியை 3 – 1 என மாஸ் யுனிச்செல்லா அணியும் வெற்றி கொண்டது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜோன் கீல்ஸ் அணியின் தலைவர் பானுக ராஜபக்ஷ முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜோன் கீல்ஸ் அணி 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை நிபுன் ரன்சிகவின் பந்துவீச்சில் லஹிரு மிலந்த ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
போட்டியின் 3 ஆவது ஓவரில் மதுக லியனபத்திரகே 7 ஓட்டங்களுடனும், பானுக ராஜபக்ஷ 2 ஓட்டங்களுடனும் ஓய்வறை திரும்பினர்
இதனையடுத்து துடுப்பாடக் களமிறங்கிய மத்திய வரிசை வீரர்களும், மாஸ் யுனிச்செல்லா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததுடன், 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன் முதல் 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.
எனினும், அடுத்து வந்த பின்வரிசை வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜோன் கீல்ஸ் அணி, 15 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களை பெற்றது.
மத்திய வரிசையில் களமிறங்கிய இஷான் ஜயரத்ன நிதானமாக விளையாடி 20 பந்துகளில் 28 ஓட்டங்களையும், விகும் சன்ஜய 23 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தனர்.
பந்து வீச்சில் மாஸ் யுனிச்செல்லா அணி சார்பில் தம்மிக பிரசாத் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், திலகரத்ன டில்ஷான் மற்றும் நிபுன் ரன்சிக ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
ஹட்டன் நெஷனல் வங்கி அணிக்கு எதிராக கான்ரிச் பினான்ஸ் வெற்றி
இந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மாஸ் யுனிச்செல்லா அணி, 15 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதில், வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ் மாஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி.எம் சம்பத்தை 2 ஆவது ஓவரிலே வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை தந்தார்.
இதில் இஷான் ஜயரத்ன மற்றும் சச்சின்த பீரிஸின் அபார பந்துவீச்சில் மாஸ் யுனிச்செல்லா அணி 51 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது.
எனினும், தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் நிதானமாகத் துடுப்பெடுத்தாட மாஸ் யுனிச்செல்லா அணி 15.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
மாஸ் யுனிச்செல்லா அணியின் துடுப்பாட்டம் சார்பில் திலகரத்ன டில்ஷான் 12 பந்துகளில் 17 ஓட்டங்களையும், ரமித் ரம்புக்வெல்ல 16 பந்துகளில் 16 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.
மறுமுனையில் ஜோன் கீல்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக இஷான் ஜயரத்ன 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சச்சின்த பீரிஸ் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகன் விருது மாஸ் யுனிச்செல்லா அணியின் நிபுன் ரன்சிகவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், டி-20 லீக் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது எல்பி பினான்ஸ் அணியின் ஷெஹான் ஜயசூரியவுக்கும் (89 ஓட்டங்கள்), சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது மாஸ் யுனிச்செல்லா அணியின் நிபுன் ரன்சிகவுக்கும் (6 விக்கெட்டுக்கள்) வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
ஜோன் கீல்ஸ் – 90 (15) – இஷான் ஜயரத்ன 28, விகும் சன்ஜய 25, தம்மிக பிரசாத் 3/20, திலகரத்ன டில்ஷான் 2/08, நிபுன் ரன்சிக 2/18
மாஸ் யுனிச்செல்லா – 92/9 (15.1) – திலகரத்ன டில்ஷான் 17, ரமித் ரம்புக்வெல்ல 16, நிபுன் ரன்சிக 14*, இஷான் ஜயரத்ன 3/24, சச்சின்த பீரிஸ் 3/15
போட்டி முடிவு – மாஸ் யுனிச்செல்லா அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<