கலப்பு அஞ்சலோட்டத்தில் பதக்கம் வென்று இலங்கை அணி சாதனை

Asian Athletics Championship 2023

250
Asian Athletics Championship 2023

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றுவரும் 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் நான்காவது நாளான இன்று (15) நடைபெற்ற 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது.

ஆசிய ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

இந்தப் போட்டியில் பிரபல இந்திய அணிக்கு பலத்த சவாலைக் கொடுத்த போதிலும், இலங்கை அணியால் இரண்டாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. எவ்வறாயினும், போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள், 15.41 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது.

4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியினால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாக இது இடம்பிடித்ததுடன், இலங்கை சாதனையாகவும் பதிவானது.

இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் இலங்கை அணியில் அருண தர்ஷன, தருஷி கருணாரத்ன, காலிங்க குமாரகே மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் இடம்பெற்றனர்.

4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இந்திய அணி (3:14.70) தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் அணி (3:15.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இதனிடையே, பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு தருஷி கருணாரத்னவும், கயன்திகா அபேரத்னவும் தகுதிபெற்றுள்ளனர். இருவரும் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் அரை இறுதி ஓட்டப் போட்டியில் பங்குபற்றினர். இதில் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பங்குகொண்ட கயன்திகா அபேரத்ன அப் போட்டியை 2 நிமிடங்கள் 06.01 செக்கன்களில் நிறைவு செய்து 3ஆவது இடத்தைப் பிடித்ததுடன், 2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குகொண்ட தருஷி கருணாரத்ன போட்டியை 2 நிமிடங்கள் 07.16 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தையும் பிடித்தனர்.

இதேவேளை, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தின் முதலாவது அரை இறுதியில் பங்குகொண்ட இலங்கை அணி, போட்டியை 3 நிமிடங்கள் 04.62 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் நாளை (16) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றுக்கொண்டது.

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நான்காவது நாள் போட்டிகள் நிறைவடையும் போது இலங்கை இதுவரை ஒரு தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்று பதக்கப் பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<