ஆசிய விளையாட்டு விழா முன்னோடிப் போட்டிகளில் 24 இலங்கையர்

278

இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை மெய்வல்லுனர் குழாம் இன்று இரவு (08) இந்தோனேஷியா நோக்கி பயணமாகவுள்ளது.  

எனினும், குறித்த போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை இழக்கவிருந்த மெய்வல்லுனர் வீரர்கள் பலருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலையீட்டால் அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய தொடருக்கான தேசிய மெய்வல்லுனர் குழாமில் அஷ்ரப்

இவ்வருடத்திற்கான பொதுநலவாய நாடுகளின்..

விளையாட்டுத்துறை அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச மட்டத்தில் மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை வென்றெடுக்கும் நோக்கில் கடந்த வருடம் முதல் அமைக்கப்பட்ட சிறப்பு மெய்வல்லுனர் குழாமில் 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் 24 வீரர்களை மாத்திரம் இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், குறித்த போட்டித் தொடருக்காக 9 வீரர்களுக்கு மாத்திரம் விமானப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு நிதியினை வழங்கியிருந்ததால், ஏனைய வீரர்களுக்கு பங்குபற்றும் வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை உருவாகியது.

இவ்விடயம் தொடர்பில் கேள்வியுற்ற விளையாட்டுத்துறை அமைச்சர், குறித்த போட்டித் தொடருக்காக தெரிவாகிய அனைத்து வீரர்களுக்கும் விமானப் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்குமாறு விளையாட்டுத்துறை பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதன் பிரதிபலான இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 24 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாம் இன்று ஜகார்த்தா நோக்கி பயணமாகவுள்ளது.

உயரம் பாய்தல் வீரர் மஞ்சுள குமார, குறுந்தூர ஓட்ட வீராங்கனை ருமேஷிகா ரத்னாயக்க மற்றும் ஈட்டி எறிதல் வீரர் வருண லக்ஷான் ஆகியோர் முறையே அவுஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு மேலதிக பயிற்சிகளுக்காகச் சென்றுள்ளனர். அதேநேரம், 800 மற்றும் 1,500 மீற்றர் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற இந்துனில் ஹேரத் மற்றும் மரதன் ஓட்ட வீராங்கனை ஹிருனி விஜேரட்ன ஆகியோர் கென்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக குறித்த வீரர்கள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குரார்ப்பண உலகக் கிண்ண மெய்வல்லுனர் போட்டிகள் லண்டனில்

மெய்வல்லுனர் போட்டிகளுக்கான உலகக்..

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை 32 நாடுகளின் பங்குபற்றலுடன் 18ஆவது ஆசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோடியாக பரீட்சார்த்த போட்டியாக இந்த அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகள் 18 நாடுகளின் பங்குபற்றலுடன் இன்று முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடருக்கான இலங்கை மெய்வல்லுனர் குழாம்

வீரர்கள்

வினோத் சன்ஞய டி சில்வா, ஹிமாஷ ஏஷான், மொஹமட் அஷ்ரப், திலிப் ருவன், காலிங்க குமார, ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார, அமில விமலசிறி, தனுக லியனபதிரன, அமில ஜயசிங்க, சன்ஞய ஜயசிங்க, டி.எஸ் ரணசிங்க, அஜித் கருணாதிலக, ஷெஹான் அம்பேபிட்டிய, தருஷ தனன்ஞய, நளின் கருணாரத்ன

வீராங்கனைகள்

உபமாலி ரத்னகுமாரி, நிமாலி லியனாரச்சி, கயன்திகா அபேரத்ன, தில்ருக்ஷி, டிலானி ரத்னாயக்க, விதூஷா லக்ஷானி, ஹசின் பிரபோதா, சச்சின்தா துலான்ஜனி, தில்ஹானி லேகம்கே