தேசிய மெய்வல்லுனர் குறும்பட்டியலில் 23 தமிழ் பேசும் வீரர்கள்

397

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இம்மாதம் 26ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தகுதி உடையவர்களின் குறும்பட்டியலை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது. 

இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ள இந்தப் போட்டித் தொடரில் சுமார் 300 வீர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

கால மதிப்பீடு மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

அத்துடன், கடந்த காலங்களில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 23 தமிழ் பேசுகின்ற வீரர்கள் குறித்த குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இதில் 16 வீரர்களும் 7 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வருடம் இதுவரை எந்தவொரு தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெறவில்லை. முன்னதாக ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கான தகுதிகாண் போட்டிகள் மற்றும் தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகள் என்பன ஒத்திவைக்கப்பட்டன

இந்த நிலையில், டிசம்பர் மாதம் முற்பகுதியில் நடத்தப்படவிருந்த இந்த வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்மாதம் 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது

அத்துடன், கொரோனா தொற்றுநோய் காரணமாக இவ்வருட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் திறமைவாய்ந்த மெய்வல்லநர்களை மாத்திரம் பங்குபற்றச் செய்வதற்கு சங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வீரர்களுக்கு கட்டுப்பாடு

இதன்படி, குறித்த தொடரில் பங்குபெற தகுதிபெற்ற வீரர்களின் பெயர் பட்டியலை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அண்மையில் வெளியிட்டிருந்தது. 

இதில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுப்பர் குழாத்தில் இடம்பெற்றுள்ள 26 வீரர்களும், தேசிய குழாத்தில் இடம்பெற்றுள்ள 66 வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

அத்துடன், தேசிய மட்டப் போட்டிகளில் அண்மைக்காலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் பேசுகின்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்

இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் தேசிய சம்பியனாக வலம்வருகின்ற மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் ஆண்களுக்கான 5,000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்

இவருடன் குறித்த இரண்டு போட்டிகளிலும் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற மற்றுமொரு மலையக வீரரான W. வொட்சனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கால மதிப்பீடு மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

அதேபோல, மற்றுமொரு மலையக வீரரான சி. அரவிந்தன் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் நிப்ராஸ் ஆகிய இருவரும் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மொஹமட் நிப்ராஸ் ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் களமிறங்கவுள்ளார்.

அத்துடன், ஆண்களுனக்கான 100 மீற்றரில் கிழக்கின் நட்சத்திர வீரரான மொஹமட் ஷ்ரப், பாசில் உடையார் மற்றும் மொஹமட் சபான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்

இதில் ஆண்களுக்கான 200 மீற்றரில் பாசில் உடையார் மற்றும் மொஹமட் சபானுடன் மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான ராஜாஸ்கானும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

அதிலும் குறிப்பாக, ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் மன்னார் பாத்திமா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த என்.எம் நசாத்கான் இந்தக் குறும்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  

இதேநேரம், மைதான நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த . புவிதரன் மற்றும் எஸ். சுகிகேரதன் ஆகிய இருவரும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் பங்குபெற தேர்வாகியுள்ளனர். இதில் மற்றுமொரு வட மாகாண வீரரான ஆர்.பி முருகய்யாவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்த புவிதரன், டக்சிதா, தீபிகா

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்று குறித்த வயதுப் பிரிவில் அதிசிறந்த வீரராகவும், வருடத்தின் அதிசிறந்த கனிஷ் மெய்வல்லுனராகவும் தெரிவாகிய, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை மாணவரான கமல் ராஜ், தேசிய மெய்வல்லுனர் தொடருக்கான குறும்பட்டியலில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ளார்

மறுபுறத்தில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற சப்ரின் அஹமட், தட்டெறிதலில் முதல் நிலை வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஷிக் மற்றும் ஆண்களுக்கான டெகத்லனில் பிரகாசித்து வருகின்ற மொஹமட் அசாம் உள்ளிட்ட வீரர்களும் தேசிய மெய்வல்லுனர் தொடருக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

இதேவளை, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கண்டி விஹார மகாதேவி மகளிர் கல்லூரி மாணவி சபியா யாமிக்கும், பெண்களுக்கான குண்டு போடுதலில் களுத்துறையைச் சேர்ந்த எப்.எஸ் றிசாட்டும் இடம்பெற்றுள்ளனர்

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் இரத்து

அத்துடன், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான அனித்தா ஜெகதீஸ்வரன் மற்றும் என். டக்சிதா, சி. தீபிகா, சி. ஹெரினா மற்றும் வி. விசோபிதா ஆகிய ஐந்து வீராங்கனைகளும் கோலூன்றிப் பாய்தலுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  

இதுஇவ்வாறிருக்க, தேசிய மெய்வல்லுனர் தொடருக்காக அறிவிக்கப்பட்ட குறும்பட்டியலில் இடம்பெறாதவர்கள், போட்டியில் பங்குபற்ற விரும்பினால் இம்மாதம் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்

விண்ணப்பிப்போரின் அண்மைக்காலங்களில் வெளிப்படுத்திய திறமைகள் மற்றும் பெறுபேறு தராதரங்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படுவார்கள் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<