ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கையிலிருந்து 21 வீரர்கள்

Asian Relay Championship 2024

174
dav

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி நேற்று (17) தாய்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றது.

தாய்லாந்தின் தலைநகர் பெங்கொக் நகரில் இம்மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 21 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இதில் இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அஞ்லோட்ட அணிகள் 4×100 மீற்றர், 4×400 மீற்றர் மற்றும் 4×400 மீற்றர் ஆகிய 3 பிரதான அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.

எவ்வாறாயினும், பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த அமாஷா டி சில்வா உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவருக்குப் பதிலாக மேதானி ஜயமான்னவை அணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான தகுதியைப் பெற்றுக் கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தருஷி கருணாரத்னவும் சுகயீனம் காரணமாக ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

முன்னதாக இவர், இம்மாத முற்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். எனினும், போட்டியின் போது ஏற்பட்ட சோர்வு காரணமாக, 600 மீற்றர் தூரத்தை ஓடி முடித்த பிறகு போட்டியிலிருந்து வெளியேறினார்.

அதேபோல, கடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற 11ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரிலும் அவர் பங்கேற்றார். எனினும், சுகயீனத்தைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.

எனவே, தருஷி கருணாரத்ன தொடர்ச்சியாக 3 போட்டித் தொடர்களை தவறவிட்டுள்ளமை இலங்கைக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இம்முறை ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இருந்து சுகயீனம் காரணமாக வெளியேறிய தருஷிக்குப் பதிலாக மாற்றீடு வீராங்கனையொருவர் பெயரிடப்படவில்லை.

இதேவேளை, ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்ற முக்கிய வீரர்களில் ஒருவரான ஹர்ஷ கருணாரத்னவும் சுகயீனம் காரணமாக இம்முறை ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் போட்டியில இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலதக பசிந்து கொடிகார இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, உபாதை மற்றும் சுகயீனம் காரணமாக இம்முறை ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பை தவறவிட்ட வீரர்களுக்குப் பதிலாக  புதுமுக வீரர்களுக்கு இலங்கை மெய்வல்லுனர் அணியில் முதல் தடவையாக வாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அணிகள் விபரம்

ஆண்கள்

4×400 மீ. அஞ்சலோட்டம்: அருண தர்ஷன, காலிங்க குமாரகே, தினுக்க தேஷான், பசிந்து கொடிகார, பபாசர நிக்கு (மேலதிக வீரர்), இசுரு லக்ஷான் (மேலதிக வீரர்)

4×100 மீ அஞ்சலோட்டம்: சமோத் யோதசிங்க, தினேத் இந்துவர, சானுக்க தர்மகீர்த்தி, கவிந்து சத்துரங்க, தினேத் சேனாநாயக்க (மேலதிக வீரர்), சி.பி.எச். கம்லத் (மேலதிக வீரர்)

பெண்கள்

4×400 மீ. அஞ்சலோட்டம்: நதீஷா ராமநாயக்க, சயுரி லக்ஷிமா மெண்டிஸ், ருமேஷிக்கா ரத்நாயக்க, நிஷேந்த்ரா பெர்னாண்டோ, சஃபியா யாமிக் (மேலதிக வீரர்).

4×100 மீ. அஞ்சலோட்டம்: சஃபியா யாமிக், ருமேஷிக்கா ரத்;நாயக்க, தினாரா தேல பண்டார, அநுருத்திகா முத்துகுமாரன, டிலுஷானி சில்வா (மேலதிக வீரர்), மேதானி ஜயமான்ன மேலதிக வீரர்)

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<