2023 ஆம் ஆண்டு இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் அட்டவணையை விளையாட்டுத்துறை அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசிய விளையாட்டுப் விழா, செப்டம்பரில் சீனாவிலும், 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பாகிஸ்தானில் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு, ஜுன் மாதம் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் விழாவும், ஆகஸ்ட் மாதம் பொதுநலவாய இளைஞர் விளையாட்டு விழாவும், நவம்பர் மாதம் 6ஆவது ஆசிய உள்ளக விளையாட்டு விழாவும் நடைபெறவுள்ளன.
இதனிடையே, கொரோனா வைரஸால்; கடந்த 2 ஆண்டுகளாக தடைப்பட்ட தேசிய விளையாட்டு விழா போட்டி நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ஆரம்பமாகியது எனினும், கடந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவின் எஞ்சிய போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சினால் இந்த ஆண்டு நடத்;தப்படுகின்ற பிரதான விளையாட்டு விழாவாக இது அமையவுள்ளது.
>> 2023இல் இலங்கை பங்கேற்கும் விளையாட்டு நிகழ்வுகள்
தேசிய மட்டத்தில் அதிகளவான வீரர்கள் பங்குபற்றுகின்ற இலங்கையின் 2ஆவது மிகப் பெரிய விளையாட்டு விழாவான 35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கிராமசேவகர் பிரிவு போட்டிகள் ஜனவரி முதல் மார்ச் வரையிலும், மாவட்ட மட்டப் போட்டிகள் மே முதல் ஜூன் 15 வரையிலும் நடைபெற உள்ளன.
இதன்படி, இந்த ஆண்டுக்கான 35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் உள்ளிட்ட தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் கடைசி இரண்டு வாரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளுக்கு மேலதிகமாக ஒவ்வொரு விளையாட்டையும் மையப்படுத்தி பல தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த விளையாட்டுத்துறை அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகவும் போட்டித் தன்மை கொண்ட ஆண்டாக இருக்கும் இந்த ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க உள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவில் இம்மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் மகளிருக்கான அங்குரார்ப்பண 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் 8ஆவது மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிலும் இலங்கை கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபையும் இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ள 4ஆவது லங்கா பிரீமியர் லீக் தொடர் (LPL) செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இந்த ஆண்டு மகளிர் சுபர் மாகாண கிரிக்கெட் தொடர் உட்பட பல முக்கிய கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
றக்பி
சர்வதேச றக்பி அரங்கில் இந்த ஆண்டு இலங்கை றக்பி பங்கேற்கும் என எதிர்பார்க்கும் போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா ஆகும்.
வழமை போன்று உள்ளுர் றக்பியில் கழகங்களுக்கிடையிலான றக்பி போட்டிகள் நடைபெறுவதுடன், மகளிருக்கான பத்து பேர் கொண்ட கழகங்களுக்கிடையிலான றக்பி தொடரை நடத்த இலங்கை றக்பி சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதவிர, இந்த ஆண்டு கழகமட்ட வளர்ந்து வரும் (மூன்றாம் பிரிவு) மற்றும் இரண்டாம் பிரிவு றக்பி போட்டித் தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அணிக்கு பதினைந்து பேர் கொண்ட மகளிருக்கான றக்பி நொக் அவுட் போட்டித் தொடர் மற்றும் ஆடவர் கிளிஃபோர்ட் கிண்ண றக்பி போட்டிகளும் பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற உள்ளன.
>> இலங்கை விளையாட்டுத்துறையில் 2022இல் நடந்தவை
கரப்பந்து
இந்த ஆண்டுக்கான முதல் கரப்பாந்தப் போட்டித் தொடராக 16 வயதுக்குட்பட்டோருக்கான அங்குரார்ப்பண ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சீனாவிலும், 22ஆவது ஆசிய ஆடவர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் மாதம் ஈரானிலும், ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் செப்டம்பர் மாதம் தாய்லாந்திலும் நடைபெற உள்ளது.
இதனிடையே, 19ஆவது ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சீனாவில் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது, மேலும் மகளிர் மற்றும் ஆடவர் தெற்காசிய கரப்ப்ந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உள்ளுர் கரப்பந்தாட்ட போட்டிகளை பொறுத்தமட்டில் ‘மஞ்சி’ தேசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மார்ச் 01 முதல் 31 வரையிலும், ‘டிஎஸ்ஐ’ பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும் நடத்த இலங்கை வலைப்பந்தாட்ட சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மெய்வல்லுனர்
மெய்யவல்லுனர் விளையாட்டை பொறுத்தமட்டில் மார்ச் மாதம் தெற்காசிய விளையாட்டுப் விழாவும், ஜூலையில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரும், செப்டெம்பரில் ஆசிய விளையாட்டு விழாவும் இலங்கை வீரர்கள் பங்கேற்கின்ற பிரதான சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளாக நடைபெற உள்ளன.
மேலும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் மாதமும், ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஏப்ரல் மாதமும், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஜூன் மாதமும் நடைபெற உள்ளது.
இதனிடையே, உள்ளூர் மெய்வல்லுனர் போட்டிகளைப் பொறுத்தமட்டில் 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் மே மாதம் நடத்த இலங்கை மெய்வல்லுனர் சங்கம் திட்டமிட்டுள்ளதுடன், ஆகஸ்ட் மாதம் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டித் தொடரை முதல் முறையாக இலங்கையில் நடத்தவும் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தயாராகி வருகிறது.
மேலும், இந்த ஆண்டு உள்ளூர் மெய்வல்லுனர் விளையாட்டில் பல தகுதிகாண் போட்டிகளை நடத்த இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
>> 2022 இல் இலங்கை விளையாட்டில் சாதித்த தமிழ் பேசும் வீரர்கள்
வலைப்பந்து
இந்த ஆண்டு வலைப்பந்து விளையாட்டின் பிரதான போட்டித் தொடராக வலைப்பந்து உலகக் கிண்ணம் தென்னாப்பிரிக்காவில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் இலங்கை அணியும் பங்கேற்கவுள்ளது.
அதுதவிர, 16 வயதுக்குட்பட்ட தெற்காசிய வலைப்பந்து தொடர் மற்றும் தெற்காசிய ஆடவர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர்களை மே மாதம் நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஜனவரி மாதம் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரும், ஒக்டோபரில் கனிஷ;ட வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரும், நவம்பரில் சுபர் லீக் வலைப்பந்து தொடரையும் நடத்த திட்டமிட்டுள்ளது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<