விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் மற்றும் வேகநடை ஆகிய மூன்று போட்டிகள் நாளை (23) அநுராதபுரத்தில் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த காலங்களில் இப்போட்டிகளுக்காக, நாட்டிலுள்ள 9 மாகாணங்களில் இருந்தும் தலா 10 வீரர்கள் வீதம் பங்குபற்றியிருந்தனர். எனினும், இம்முறை இவ்வனைத்து போட்டிகளையும் திறந்த மட்டப் போட்டிகளாக நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு
நாட்டில் நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக, இலங்கை ………..
எனவே, தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் இம்மூன்று போட்டிகளும் திறந்த மட்டப் போட்டிகளாக நடைபெறுவது இதுவே முதல்தடவையாகும்.
இதன்படி, போட்டிகளின் முதலாம் நாளான நாளை (23) ஆண்களுக்கான ரேசிங் சைக்கிளோட்டப் போட்டி காலை 9.00 மணிக்கும், பெண்களுக்கான ரேசிங் சைக்கிளோட்டப் போட்டி பிற்பகல் 3.00 மணிக்கும் வலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இதில் ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி 126 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாகவும், பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டிகள் 36 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாகவும் நடைபெறவுள்ளன.
இரண்டாம் நாளான நாளை மறுதினம் (24) ஆண், பெண் இருபாலாருக்குமான ஸ்டாண்டாட் சைக்கிளோட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், இருபாலாருக்குமான 10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட வேகநடைப் போட்டிகள் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதேவேளை, போட்டிகளின் கடைசி நிகழ்ச்சியான மரதன் ஓட்டப் போட்டி 26ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி 42.95 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாகும்.
நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்ட இலங்கை வீரர் ரொஷான்
தாய்லாந்தில் பெங்கொக் நகரில் நடைபெற்ற தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் ……….
இப்போட்டிகளின் முடிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொள்ளும் வீர, வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், முதலிடத்தைப் பெறுகின்ற வீரருக்கு வழங்கப்படுகின்ற பரிசுத் தொகையை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தடன், ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறுகின்ற மாகாணங்களுக்கு சம்பியன் பட்டங்களும் கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, சைக்கிளோட்டப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கைக் குழாத்தில் இணைத்துக் கொள்ள இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<