தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் செப்டெம்பர் 5 ஆரம்பம்

173

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையுடனும், தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம், 6 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் உள்ள ஊனமுற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீரர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரேயொரு போட்டித் தொடராக விளங்குகின்ற தேசிய பரா மெய்வல்லுனர் தொடரில் இம்முறை 45 கழகங்களைச் சேர்ந்த சுமார் 800 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

பார்வை குறைபாடுடையவர்கள், உடல் ரீதியாக குறைபாடுடையவர்கள் மற்றும் சிந்தனை குறைபாடுடையவர்கள் என மூன்று வகையான வீரர்களுக்காக 190 இற்கும் மேற்பட்ட சுவட்டு, மைதான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 

அத்துடன், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி வீரர்களும் இம்முறை போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் டுபாயில் நடைபெறவுள்ள உலக பரா மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியாகவும் இம்முறை தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் அமையும் என தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரஜித்த அம்பே மொஹோட்டி தெரிவித்தார். 

இராணுவ மெய்வல்லுனரை ஆக்கிரமிக்கும் தமிழ் பேசும் வீரரகள்

இலங்கை இராணுவத்தினால் 56ஆவது…..

தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் குறித்து ஊடகங்ளை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன்வைட் கேட்போர்கூடத்தில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ரஜித்த அம்பே மொஹோட்டி, கடந்த காலங்களைவிட இம்முறை நடைபெறவுள்ள தேசிய பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். 

அத்துடன், தேசிய பரா மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள 17 வீரர்களும் இந்தப் போட்டிகளில் களமிறங்கவுள்ளதுடன், உலக பரா மெய்வல்லுனர் தொடருக்காக தகுதியினைப் பெற்றுக்கொண்ட 10 வீரர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். 

இதேநேரம், உலக பரா மெய்வல்லுனரில் பங்குபற்றும் வீரர்களுக்கு 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். 1996 ஆம் ஆண்டு முதல் தடவையாக இலங்கையிலிருந்து அதிகளவான வீரர்கள் பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.

எனவே, அடுத்த வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ பரா ஒலம்பிக்கிலும் அதிகளவான வீரர்களை பங்குபுற்றச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து வகையான பரா விளையாட்டுப் போட்டிகளுக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்ட நிறுவனம் தொடர்ந்து 13 வருடங்களாக அனுசரணை வழங்குகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<