கிரிக்கெட் உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக பத்து நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் இங்கிலாந்து நோக்கி படையெடுத்துள்ளனர். அத்துடன், உலகக் கிண்ண லீக் ஆட்டங்களுக்கு முன்னதாகப் பயிற்சி ஆட்டங்களும் இன்று (24) முதல் நடைபெறுகின்றது.
வழக்கமாக உலகக் கிண்ணத்தில் குழுநிலை ஆட்டங்கள் இருக்கும். ஆனால், இம்முறை அப்படியெல்லாம் இல்லை. 10 அணிகள் பங்குபற்றவுள்ள இம்முறை போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்றைய அணிகளுடனும் மோதப்போகின்றன. நேரடியாக அரையிறுதிதான் என்பதால், ஒவ்வொரு லீக் போட்டியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 10 அணிகளுள், கோப்பை வெல்லத் தகுதியான அணி எது? அரையிறுதிக்குப் போகும் பலத்துடன் இருக்கும் அணிகள் எவை? எந்த அணிகள் படுமோசமாக ஆடும்? ஆச்சரியமளிக்கப்போகும் அணிகள் எவை? இவற்றையெல்லாம் விட உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள 10 அணிகளும் தமது அணித் தலைவர்களின் திறமையை மாத்திரமல்லாது அதிர்ஷ்டத்திலும் வெகுவாக சார்ந்தே உள்ளது. அதிலும் அனுபவமிக்க அணித் தலைவர்களோடு, முதற்தடவையாக உலகக் கிண்ண அணியொன்றை வழிநடத்தவுள்ள அனுபவமில்லாத தலைவர்களும் இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ளனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான அனைத்து தகுதியும் எனக்கு உண்டு: திமுத்
உலகக் கிண்ணத்தில் விளையாடக் கிடைத்தமை மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாகத் தெரிவித்த இலங்கை ஒருநாள் கிரிக்கெட்
இதில் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மொர்தசா ஆகிய மூன்று வீரர்களும் 2015 இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் தத்தமது அணிகளை வழிநடத்தியிருந்தனர். எஞ்சியுள்ள ஏழு அணித் தலைவர்களுக்கும் இது கன்னி உலகக் கிண்ணப் போட்டியாக அமையவுள்ளது.
திமுத் கருணாரத்ன (இலங்கை)
இம்முறை உலகக் கிண்ணத்தில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் களமிறங்குகின்ற ஓர் அணியாக இலங்கையை விளங்குகின்றது. தினேஷ் சந்திமல், நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க, அகில தனஞ்சய என முன்னணி வீரர்களையெல்லாம் கழட்டிவிட்டு புதிய வீரர்களைக் கொண்ட ஒரு அணியை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உலகக் கிண்ணத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதெல்லாம் ஒரு புறமிருக்க, நான்கு வருடங்களாக எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்காத திமுத் கருணாரத்னவை இலங்கை அணியின் தலைவராக நியமித்திருக்கிறார்கள். கடைசியாக 2015 உலகக் கிண்ணத்தில் விளையாடிய கருணரத்ன இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார். இத்தனைக்கும், ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி வெறும் 15.83 ஆகும்.
அத்துடன் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 0 என திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. அதற்கு முன் இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்பட்டிருந்தார்.
எனினும், அணியில் உள்ள ஒருசில சிரேஷ்ட வீரர்களுடன் ஏற்பட்ட முறுகல்நிலை காரணமாக அவருக்கு அணியில் உள்ள ஏனைய வீரர்களால் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனவே இவ்வாறான காரணங்களை அடிப்படையாக வைத்து இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பை திமுத்திடம் வழங்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
எது எவ்வாறாயினும், லசித் மாலிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், திசர பெரேரா உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் இம்முறை உலகக் கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்களின் ஒத்துழைப்பு திமுத் கருணாரத்னவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விராட் கோஹ்லி (இந்தியா)
அண்மைக்காலமாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய தலைவர்களில் விராட் கோஹ்லிக்கு முக்கிய இடம் உண்டு. இந்திய அணியை 68 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி 49 இல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் 73.88 ஆகும். 2017ஆம் ஆண்டு ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்திய அனுபவம் கோஹ்லிக்கு உண்டு. இந்தப் பின்னணியில் தான் முதல் முறையாக உலகக் கிணண்ப் போட்டியில் இந்திய அணியை கோஹ்லி வழிநடத்தவுள்ளார்.
உலகக் கிண்ணத்தில் ஓட்ட இயந்திரமாக ஜொலித்த நட்சத்திரங்கள்
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. உலகக் கிண்ணத்
இயன் மோர்கன் (இங்கிலாந்து)
சொந்த மண்ணில் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறுவதால் முதல் முறையாக சம்பியனாக வேண்டும் என்ற முனைப்பில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்குகிறது.
இறுதியாக நடைபெற்ற 2015 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் குழுநிலைப் போட்டிகளுடன் வெளியேறிய இங்கிலாந்து அணி, அதன்பிறகு அணியில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு வெற்றிகளை அள்ளிக் குவித்தது. உள்ளூர், வெளியூர் என ஒருநாள் போட்டிகளில் 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்த இங்கிலாந்து அணி, ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதல் நிலை அணியாக வலம்வந்து கொண்டிருக்கின்றது.
அதுமாத்திரமின்றி, இறுதியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4 – 0 என கைப்பற்றிய இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில் 18 இல் வெற்றி பெற்று அசத்தியது. அத்துடன், அந்த அணி இறுதியாக விளையாடிய 88 போட்டிகளில் 38 தடவைகள் 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
தனது சொந்த மண்ணில் அசுரபலத்துடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் அனைத்து அணிகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சர்பராஸ் அஹமட் (பாகிஸ்தான்)
2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சர்பராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது. அதே எதிர்பார்ப்புடன் மீண்டும் இங்கிலாந்தில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் சர்பராஸ் அஹமட் இளம் வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணியை வழிநடத்தவுள்ளார்.
பாகிஸ்தான் அணியை 35 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி 21 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் 61.76 ஆகும். அண்மைக்காலத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக துடுப்பாட்டத்தில் சர்பராஸ் அஹமட் பிரகாசிக்காவிட்டாலும் இம்முறை உலகக் கிண்ணத்தில் விக்கெட் காப்பாளராகவும், தலைவராகவும் அவ்வணியை வழிநடத்தவுள்ளார்.
குல்பதீன் நயீப் (ஆப்கானிஸ்தான்)
ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான குல்பதீன் நயிப், இம்முறை உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்தவுள்ளார். உலக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் அவ்வணியின் தலைவர் பதவியில் இருந்து அஸ்கர் ஆப்கான் நீக்கப்பட்டு, குல்பதீனுக்கு அப்பதவியை வழங்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
எனவே புதிய தலைவராக நியமிக்கப்பட்ட குல்பதீன் நயிப்புக்கு இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனினும், உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக ஸ்கொட்லாந்து அணியுடன் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 – 0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. அதேபோல அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 – 1 என சமப்படுத்தியது.
எனவே, இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு இல்லாவிட்டாலும், ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து தொடர்கள் அவருக்கு முன் ஆயத்தத்தைக் கொடுத்திருக்கும் என நம்பப்படுகின்றது.
இதேவேளை, மித வேகப் பந்துவீச்சாளரான குல்பதீன் நயீப், ஆப்கானிஸ்தான் அணிக்காக 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதுடன், 807 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
ஆரோன் பின்ஞ்ச் (அவுஸ்திரேலியா)
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருட போட்டித் தடைக்குள்ளாகிய ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக அவுஸ்திரேலிய ஒருநாள் அணியின் தலைவராக 2018 முதல் ஆரோன் பின்ஞ்ச் செயற்பட்டு வருகின்றார். இவருடைய தலைமையின் கீழ் 18 போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 10 இல் வெற்றி பெற்றது. அதிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியிருந்தது. இவரது வெற்றி சதவீதம் 56 ஆகும்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிரடியாக விளையாடி வந்த ஆரோனுக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டவுடன் அவரது வழமையான ஆட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது. எனினும், இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதங்களைப் பெற்றுக் கொண்டார். எனவே இம்முறை உலகக் கிண்ணத்தில் சமபலம் பொருந்திய அணியாக களமிறங்கவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு ஆரோன் பின்ஞ்சின் தலைமைத்துவம் மிகப் பெரிய சாதகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மஷ்ரபி மொர்தசா (பங்களாதேஷ்)
உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியை இரண்டாவது தடவையாக மஷ்ரபி மொர்தசா வழிநடத்தவுள்ளார். இவரது தலைமையில் பங்களாதேஷ் அணி கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் காலிறுதி வரை முன்னேறியது. எனினும், இந்தியாவுடன் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவ்வணிக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது.
பங்களாதேஷ் அணியை 73 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ள மஷ்ரபி, 40 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார். தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ள மஷ்ரபிக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நிறைவுக்குவந்த அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. இதே உத்வேகத்துடன் உலகக் கிண்ணத்திலும் பிரகாசிப்பதற்கு மஷ்ரபி மொர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணி காத்துக் கொண்டிருகின்றது.
பாப் டு ப்ளெசிஸ் (தென்னாபிரிக்கா)
உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை பல தடவைகள் தவறவிட்ட அணிகளில் ஒன்றாக தென்னாபிரிக்க அணி விளங்குகிறது. இறுதியாக 2015 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவிய டி வில்லியர்ஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் பாப் டு ப்ளெசிஸ் தலைமையில் களமிறங்கவுள்ளது.
2018 முதல் இன்று வரை டு ப்ளெசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, ஐந்து இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றுள்ளதுடன், ஒரேயொரு தொடரை இழந்தது. துடுப்பாட்டத்தில் 46.54 என்ற சராசரியைக் கொண்டுள்ள டு ப்ளெசிஸின் வெற்றி சதவீதம் 83.33 ஆகும்.
தென்னாபிரிக்க அணி சொந்த மண்ணில் பலம்பொருந்திய அணியாக விளங்கினாலும், இம்முறை உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு விளையாடப் போகின்றது என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேன் வில்லயம்சன் (நியூசிலாந்து)
2015 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனும் ஓர் அங்கத்தவராக இடம்பெற்றிருந்தார். அண்மைக்காலமாக டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் நிதானமாக விளையாடுகின்ற துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற கேன் வில்லியம்சனுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் சாதிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்)
இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகவும் இளம் வயது கொண்ட (27 வயது) தலைவராக ஜேசன் ஹோல்டர் விளங்குகிறார். அவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி அண்மைக்காலங்களில் எதிர்பார்த்தளவு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும், இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி சமப்படுத்தியிருந்தது. அதேபோல அண்மையில் நிறைவுக்கு பங்களாதேஷ், அயர்லாந்து அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.
தொட முடியாத உயரத்தில் மெக்ராத்: சாதிக்க காத்திருக்கும் மாலிங்க
உலகக் கிண்ண வரலாற்றை எடுத்துக் கொண்டால் துடுப்பாட்ட வீரர்களின் அபார ஆட்டத்தால் பல அணிகள்
எனவே இம்முறை உலகக் கிண்ணத்தில் சிரேஷ்ட மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கவுள்ளது. அதேபோன்று, கிறிஸ் கெய்ல், அன்ட்ரூ ரஸல், கிரென் பொல்லார்ட் மற்றும் டெரென் பிராவோ உள்ளிட்ட உலகத்தரமிக்க வீரர்கள் அவ்வணியில் இடம்பெற்றிருப்பது ஜேசன் ஹோல்டருக்கு இரட்டிப்பு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க