இலங்கையை வந்தடைந்த பிபா வெற்றியாளர் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

294
Photo courtesy - president media unit

சர்வதேச கால்பந்து அரங்கில் மிக உயரிய விருதாக கருதப்படுகின்ற பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம் முதல் தடவையாக இலங்கை மண்ணை நேற்று(23) இரவு வந்தடைந்தது.

விசேட விமானம் மூலம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நள்ளிரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வைக்காக அமைச்சரினால் கிண்ணம் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

FIFA உலகக் கிண்ணத்தை பார்வையிட 1,500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தினை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்…

இந்நிகழ்வில் 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற பிபா உலகக் கிண்ணத்தை பிரான்ஸுக்குப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் கரம்பு, ரஷ்ய தூதுவர், வெளிநாட்டு பிரதிநிதிகள், பிபா அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளன அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிபா வெற்றியாளர் கிண்ணத்தை ஜனாதியிடம் கையளிக்கும் விசேட நிகழ்வு இன்று(24) காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்டியன் கரம்புவினால் பிபா வெற்றியாளர் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அதேநேரம், பிபா வெற்றியாளர் கிண்ணத்தின் உலகம் சுற்றும் குழுவினரால் ஜனாதிபதிக்கு மினி பிபா கிண்ணமொன்றும் பரிசாக வழங்கிவைக்கப்பட்டது.

இதனையடுத்து இலங்கை ரசிகர்களின் பார்வைக்காக பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்ட பிபா சம்பியன் கிண்ணம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

இதன்போது இலங்கை கால்பந்தின் தொலைநோக்கு 2030 திட்டமும் பிரதமரினால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிபா உலகக் கிண்ணம் ரசிகர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

பாடசாலை கால்பந்தின் காலிறுதி மோதல்களில் உள்ள அணிகள்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்றுக்கான கால்பந்து தொடரின் …

உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள வெற்றிக் கிண்ணத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது பயணமாக அது இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. மேலும், உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக் கிண்ணம் இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும்.

நான்காவது தடவையாக உலகை வலம் வரும் பிபா உலகக் கிண்ணம் இன்று மாலை மாலைத்தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo courtesy – president media unit

கொகா கோலா நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் இந்தப் பயணம் இடம்பெற்றுவருவதுடன், அதன் முதலாவது கட்டம் கடந்த வருடம் செப்டம்பர் 9ஆம் திகதி மொஸ்கோவில் ஆரம்பமானது. இதனையடுத்து ரஷ்யாவில் 78 தினங்களாக 16 நகரங்களில் வலம் வந்த உலகக் கிண்ணம் கடந்த நவம்பர் 25ஆம் திகதி அதன் முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்தது.

தற்போது உலக வலத்தை ஆரம்பித்துள்ள குறித்த கிண்ணம் ஜப்பானின் ஒசாகாவில் உலக வலத்தை நிறைவு செய்யும். அங்கிருந்து இரண்டாம் கட்டமாக தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்படும் உலகக் கிண்ணம் ரஷ்யாவின் மேலும் 16 நகரங்களில் வலம் வரவுள்ளதுடன் அதன் பயணம் சென் பீட்டர்ஸ்பேர்கில் நிறைவுபெறும்.