ஹட்ரிக் கோல் மூலம் ஆர்ஜன்டீனாவின் உலகக் கிண்ண கனவை நனவாக்கிய மெஸ்ஸி

598
2018 FIFA World Cup

லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் தீர்க்கமான ஈக்வடோர் அணியுடனான போட்டியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்ற ஆர்ஜடீன அணி கடைசி நேரத்தில் அடுத்த ஆண்டு உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

தென் அமெரிக்க மண்டலத்தில் இலங்கை நேரப்படி இன்று (11) நடைபெற்ற இறுதிக் கட்ட தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டிய உருகுவே மற்றும் சமநிலை செய்த கொலம்பிய அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறின.

தென் அமெரிக்க மண்டலத்தில் நான்கு அணிகளே உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெற முடியும் என்ற நிலையில் ஆர்ஜன்டீனா ஆறாவது இடத்தில், 1970 இற்கு பின் முதல் முறை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறும் அபாயத்துடனேயே தனது கடைசி தகுதிகாண் போட்டியில் ஈக்வடோரை எதிர்கொண்டது.   

கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ள ஈக்வடோர் தலைநகர் குயிடோவில் நடைபெற்ற போட்டியில் ஆர்ஜன்டீனா அதிர்ச்சி ஆரம்பத்தை பெற்றது. போட்டி ஆரம்பித்து 38ஆவது வினாடியில் ரொமாரியோ இபெர்ரா ஈக்வடோர் சார்பில் கோல் புகுத்த, ஈக்வடோர் 1-0 என முன்னிலை அடைந்தது. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி ஒன்றில் ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக பெறப்பட்ட மிக வேகமான கோலாக இது இருந்தது.   

எனினும் கடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஆர்ஜன்டீன அணிக்கு மெஸ்ஸியின் அபாரா ஆட்டம் கைகொடுத்தது.

ஐந்து தடவைகள் உலகின் சிறந்த வீரராக தெரிவான மெஸ்ஸி 12 ஆவது நிமிடத்தில் முன்னாள் மன்செஸ்டர் யுனைடட் கழக மத்தியகள வீரர் ஏன்ஜல் டி மரியாவுடன் துணை சேர்ந்து முதலாவது கோலைப் பெற்றார்.

பின்னர் எட்டு நிமிடங்கள் கழித்து மைதானத்தின் ஓரப் பகுதியில் இருந்து வேகமாக அடித்து கோல் ஒன்றை போட்ட மெஸ்ஸி ஆர்ஜன்டீன அணியை முன்னிலை பெறச்செய்ததோடு இரண்டாவது பாதியில் தனித்து பந்தை எடுத்துச் சென்று கோலாக மாற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.   

தனது சொந்த மண்ணில் பொலிவிய அணியை எதிர்கொண்ட உருகுவே 24 ஆவது நிமிடத்தில் எதிரணிக்கு ஓன் கோல் ஒன்றை போட்டபோதும் அடுத்தடுத்து நான்கு கோல்களை போட்டு வெற்றியை உறுதி செய்துகொண்டது.

இதன்போது பொலிவிய அணிக்காக உருகுவே 79 ஆவது நிமிடத்தில் மற்றொரு ஓன் கோலை போட்டது. இறுதில் 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உருகுவே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுக் கொண்டது.   

மிகச் சிறிய நாடாக சாதனையுடன் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற ஐஸ்லாந்து

கடந்த ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த….

பேரு அணிக்கு எதிராக விருந்தாளியின் மண்ணில் ஆடிய கொலம்பிய அணி போட்டியை 1-1 என சமநிலை செய்தது. இதன் மூலம் தென் அமெரிக்க மண்டலத்தில் நான்காவது இடத்தைப் பிடித்த கொலம்பிய அணி அடுத்த ஆண்டு ரஷ்யா செல்வதற்கு தகுதி பெற்றுக் கொண்டது.

பேரு அணிக்காக இரண்டாவது பாதியில் போலோ குவர்ரேரோ போட்ட கோலின் மூலம் அந்த அணி 1982 ஆம் அண்டுக்கு பின்னர் மீண்டும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.  

தென் அமெரிக்க மண்டலத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த பேரு அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற ஓசியானியா மண்டல சம்பியன் நியூசிலாந்துடன் இரண்டு சுற்று பிளே ஓப் (Play off) போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

ஐந்து முறை உலக சம்பியனான பிரேசில் தென் அமெரிக்க மண்டலத்தில் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் தனது கடைசி தகுதிகாண் போட்டியில் சிலியை எதிர்கொண்டது. எனினும் இந்த போட்டி சிலி அணிக்கு தீர்க்கமானதாக இருந்தது.

கடந்த இரண்டு கோப்பா அமெரிக்க கிண்ணத்தை சுவீகரித்த சிலி தொடர்ச்சியாக மூன்றாவது உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற பிரேசிலை வீழ்த்த வேண்டி இருந்தது.

ஆனால் பிரேசிலில் நடைபெற்ற இந்த போட்டியில் போலிக்ஹோ (55’) மற்றும் ஜீசஸ் (Gabriel Jesus) (57, 90+2) நிமிடங்களில் கோல்களைப் பெற பிரேசில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை வென்றது. இதனால் சிலியின் உலகக் கிண்ண கனவு தகர்ந்தது.

தென் அமெரிக்கா: பிரேசில், உருகுவே, கொலம்பியா, ஆர்ஜன்டீனா உலகக் கிண்ணத்திற்கு தகுதி. பேரு பிளே ஓப் சுற்றுக்கு தேர்வு  

போர்த்துக்கல், பிரான்ஸ் தகுதி

ஐரோப்பிய சம்பியன்ஸ் போர்த்துக்கல் அணி பரபரப்பான போட்டியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது.

ஐரோப்பிய மண்டல தகுதிகாண் சுற்றில் B குழுவுக்காகவே போர்த்துக்கல் அணி சுவிட்சர்லாந்தை நேற்று (10) எதிர்கொண்டது. இந்த போட்டியில் தோற்றாலோ அல்லது சமநிலை செய்தாலோ போர்த்துக்கல் பிளே ஒப் போட்டிகளில் ஆடவேண்டி ஏற்படும் என்ற நெருக்கடியுடனேயே தனது சொந்த மண்ணில் நடந்த போட்டியில் களமிறங்கியது.

28 வருடங்களின் பின் FIFA உலகக் கிண்ணத்தில் எகிப்து

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில்…

எனினும் சுவிட்சர்லாந்து வீரர் ஜோன் ஜவ்ரோவ் (Johan Djourou) போட்ட ஓன் கோல் மற்றும் போர்த்துக்கல் வீரர் அன்ட்ரே சில்வா போட்ட கோல்கள் மூலம் போர்த்துக்கல் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் B குழுவில் முதலிடம் பெற்ற போர்த்துக்கல் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றதோடு சுவிட்சர்லாந்து பிளே ஓப் சுற்றில் ஆட வேண்டி ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் A குழுவுக்காக நேற்று நடந்த போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் பெலாருஸ் அணியை வீழ்த்திய பிரான்ஸ் அந்த குழுவில் முதலிடத்தை பிடித்து உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது. நேற்று நடந்த நெதர்லாந்துடனான போட்டியில் சுவீடன் 2-0 கோல்கள் வித்தியாசத்தில் தோற்றபோதும் அந்த அணி A குழுவில் இரண்டாவது இடத்தை உறுதி செய்து கொண்டு பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது.  

2014 உலகக் கிண்ணத்தில் மூன்றாம் இடத்தை பெற்ற நெதர்லாந்து இம்முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.

A குழுவில் ஜிப்ரால்டர் அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கிறீஸ் உலகக் கிண்ண பிளே ஓப் சுற்றுக்கு தனது இடத்தை உறுதி செய்து கொண்டது.

ஐரோப்பிய மண்டலத்திற்கான குழு நிலை போட்டிகள் நேற்றுடன் முடிவுற்ற நிலையில் ஒன்பது குழுக்களிலும் முதலிடத்தை பெற்ற ஒன்பது அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து மேலும் நான்கு அணிகளுக்கு உலகக் கிண்ணத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இதற்காக ஒவ்வொறு குழுக்களிலும் சிறந்த இரண்டாவது இடத்தை பெற்ற எட்டு அணிகள் பிளே ஓப் சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் அடுத்த மாதம் இரண்டு கட்ட பிளே சுற்றுகளில் ஆடவுள்ளன. இதன் மூலம் மேலும் நான்கு அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.

ஐரோப்பா: பிரான்ஸ், போர்த்துக்கல், ஜேர்மனி, செர்பியா, போலந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஐஸ்லாந்து உலகக் கிண்ணத்திற்கு தகுதி.

சுவீடன், சுவிட்சர்லாந்து, வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசு, டென்மார்க், இத்தாலி, கிறீஸ், குரோஷியா பிளோ ஓப் சுற்றுக்கு தேர்வு.

வெளியேறியது அமெரிக்கா

கொஸ்டா ரிகாவுடனான போட்டியில் பெரும் சர்ச்சைக்குரிய கோல் ஒன்றைப் பெற்ற பனாமா அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. இந்த போட்டி முடிவின் மூலம் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் (CONCACAF) பிராந்தியத்தில் அமெரிக்கா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது.  

பனாமா தலைநகரில் இலங்கை நேரப்படி நேற்று நடைபெற்ற போட்டியில் வெனகாஸ் 36 ஆவது நிமிடத்தில் கோலொன்றை அடித்து கொஸ்டா ரிகாவை முன்னிலை பெறச் செய்தபோதும் 52 ஆவது நிமிடத்தில் பனாமா போட்ட பதில் கோல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோணர் கிக் மூலம் கொஸ்டா ரிகா கோல் கம்பத்தை நோக்கி வந்த பந்தை பனாமா வீரர் டொர்ரஸ் கோலுக்குள் அடிக்க முயன்றபோது அது கோலுக்குள் நுழையாமலேயே வெளியேறிச் சென்றது. எனினும் அதனை கோலென அறிவித்த நடுவரிடம் கொஸ்டா ரிக்கா வீரர்கள் வாதாடியபோதும் முடிவு மாற்றப்படவில்லை.   

பின்னர் போட்டியின் 87 ஆவது நிமிடத்தில் பனாமா இரண்டாவது கோலை அடித்து முதல் முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

இந்த முடிவின் மூலம் கொன்காகப் மண்டலத்தில் அமெரிக்கா மற்றும் ஹொன்டுராஸ் அணிகளைப் பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதன் மூலமே பனாமா உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றது.

எனினும் அமெரிக்கா கட்டாயம் வெற்றி பெறவேண்டிய போட்டி ஓன்றில் டிரினிடாட் மற்றும் டொபாகோவிடம் 1-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் அமெரிக்கா 1986 இற்கு பின்னர் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

கொன்காகப் மண்டலத்தில் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற மெக்சிகோ அணியை இன்று நடந்த தகுதிகாண் போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஹொன்டுராஸ் அணி அந்த மண்டலத்தில் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

இதன்படி ஹொன்டுராஸ் அடுத்த மாதம் இரண்டு கட்ட பிளோ ஓப் சுற்றில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

கோல் எல்லைக்குள் நுழைந்தது பற்றி உறுதி செய்யும் கோல் லைன் தொழில்நுட்பம் கொன்காகப் தகுதிகாண் போட்டிகளில் பயன்படுத்தப்படவில்லை.  

2009 ஆம் ஆண்டு பிளோ ஓப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக தியரி ஹென்ரி தனது கையால் போட்ட சர்ச்சைக்குரிய கோல் மூலமே பிரான்ஸ் அணி 2010 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. இது சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தள்ளப்பட்டதோடு 5 மில்லியன் யூரோ இழப்பீடோடு பிரச்சினை தீர்ந்தது.  

கொன்காகப்: மெக்சிகோ, கொஸ்டா ரிகா, பனாமா உலகக் கிண்ணத்திற்கு தகுதி. ஹொன்டுராஸ் பிளோ ஓப் சுற்றுக்கு தேர்வு